“அலரி மாளிகையில் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பங்கேற்பார்கள்.
இந்த முடிவில் மாற்றம் எதுவும் இல்லை.”- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கடசியின் தலைவர் மாவை சேனாதிராஜா நேற்றிரவு ‘உதயன்’ பத்திரிகையிடம் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,”எதிர்க்கட்சிகளில் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி. ஆகிய கட்சிகள் பிரதமர் மஹிந்தவின் கூட்டத்தைப் பகிஷ்கரிக்கின்றார்கள் என்பதற்காக நாமும் கூட்டத்தைப் பகிஷ்கரிக்க முடியாது. எமது நிலைப்பாடுகளை பிரதமரிடத்தில் நாம் நேரில் தெரிவிக்க வேண்டும்.
அரசின் குறைபாடுகளை நாம் நேரில் சுட்டிக்காட்ட வேண்டும். அதற்குரிய தளமாக இன்று காலை 10 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெறும் கூட்டத்தைப் பயன்படுத்துவோம்.
அதற்கு முன்னர் இன்று காலை 8 மணிக்கு கூட்டமைப்பின் முன்னாள் எம்.பிக்கள் அனைவரும் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் ஒன்றுகூடிப் பேசவுள்ளோம்.
அதன்பின்னர் எமது நிலைப்பாடுகள் மற்றும் குறைபாடுகளை பிரதமரின் கூட்டத்தில் எடுத்துரைக்கவுள்ளோம்” – என்றார்.