நம்பிக்கையில்லா பிரேரணையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஒருபோது வாக்களிக்க மாட்டார்கள் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிரணியினரால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்துகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு இருக்கும் வரையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை தேசிய அரசியலில் இருந்து அசைக்க முடியாது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் மஹிந்த ராஜபக்ஷ படுதோல்வியினை எதிர்கொள்வார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக செயற்படமாட்டாது. நாட்டு நன்மை கருதாமல் தமது சுயநல கொள்கைகளை மாத்திரம் நிறைவேற்றிக்கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தின் மீது செல்வாக்கு செலுத்தி வருகின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள நம்பிக்கையில்லா பிரேரணை விவகாரத்தில் கூட்டு எதிர்க்கட்சிக்கு எதிராகவும், ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாகவும் தமது தீர்மானத்தினை வெளிப்படுத்தும்” என கூறினார்