தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் என்னை அடிக்கடி விமர்சிக்கின்றார். நான் முரண்பாட்டு அரசியலைத் தொடர விரும்ப வில்லை. இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்தெரிவித்தார்.
கொழும்பு ஆங்கில ஊடகத்துக்கு அவர் வழங்கிய செவ்வியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
எனது செயற்பாடுகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சிலர் மகிழ்ச்சியடையவில்லை என்பது எனக்குத் தெரியும். நான் திரும்பத் திரும்ப, ஒரு நாடாளுமன்ற உறுப்பினரால் விமர்சிக்கப்படுகிறேன். முரண்பாட்டு அரசியலைத் தொடர நான் விரும்பவில்லை.
எனக்கு அளிக்கப்பட்ட ஆணையின் படியே செயற்பட்டிருக்கிறேன். எனது ஆற்றலைக் கொண்டு, அதனைச் செய்திருக்கிறேன். எமது மாகாணசபையின் ஆயுள்காலம் முடிவதற்கு முன்னர், அதன் செயற்பாடுகள் தொடர்பான அறிக்கையை வெளியிடுவேன் – என்றார்.
அதேவேளை, புதிய கூட்டணியை அமைப்பது குறித்து முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், அவரிடம் இருந்து தமக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளது என்றும் ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.