மூக்கில் கூடைப்பந்து அளவுக்கு பெரிய கட்டியுடன் தவித்து வரும் கியூபா சிறுவனுக்கு ஆபத்தான அறுவைசிகிச்சை மேற்கொள்ள அமெரிக்க டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.
கியூபா நாட்டை சேர்ந்தவர் இம்மானுவேல் ஜயாஸ் (14). இவருக்கு பிறக்கும் போதே, ‘போலியோஸ்டோடிக் பைப்ரோஸ் டிஸ்பிளாசியா’ என்ற திசு குறைபாடு இருந்தது.
இதனால், இடது கால், கை, ஊனத்துடன் பிறந்தார். ஆனாலும், வீல்சேரில் அமர்ந்தபடி, சராசரி குழந்தைகளை போல பள்ளி சென்று வந்த இம்மானுவேலுக்கு 11 வயதாகும் போது மூக்கில் லேசான பரு போன்ற கட்டி வந்துள்ளது.
நாளடைவில் மிக வேகமாக வளர்ந்த கட்டி, தற்போது 4.5 கிலோ எடையுடன் கூடைப்பந்து அளவுக்கு பெரிதாகி உயிருக்கே ஆபத்தாக வளர்ந்துள்ளது.பைப்ரோஸ் திசுக்களால் மண்டை ஓட்டு எலும்பானது கீழ் தாடையில் இருந்து மிக வேகமாக வளர்ந்து பெரிதானதே இதற்கு காரணம். இதனால், சிறுவனால் சாப்பிடவோ, பார்க்கவோ, பேசவோ முடியாமல் தவித்து வருகிறான்.
இந்த கட்டி மேலும் வளர்ந்தால் சிறுவனின் கழுத்து எலும்பு முறியும். பார்வை பறிபோகும். மேலும், சுவாச பாதிப்பு ஏற்பட்டு மூச்சுத்திணறலும் ஏற்படலாம் என டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
கியூபாவில் இதற்கான சிகிச்சை அளிக்க முடியாத இம்மானுவேலின் பெற்றோர், அமெரிக்க டாக்டர்களின் உதவியை நாடி உள்ளனர்.
இதைத்தொடர்ந்து தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் சிறுவன் மருத்துவ விசாவில் அமெரிக்காவின் மியாமியில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், வரும் 3ம் தேதி ஆபத்தான அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். இது புற்றுநோய் கட்டி இல்லை என்றாலும், உரிய சிகிச்சை இன்றி அகற்றினால் சிறுவனின் உயிருக்கே ஆபத்தாகி விடும் என டாக்டர்கள் கூறி உள்ளனர்.
* போலியோஸ்டோடிக் பைப்ரோஸ் டிஸ்பிளாசியா என்பது மரபு வழி குறைபாடாகும்.* இது ஊனத்திற்கு காரணமான வெறும் எலும்பு குறைபாடாக இல்லாமல், பைப்ரோஸ் திசுக்களால் எலும்புகள் வளர்ச்சி அடையும் அரிய பாதிப்பாகும்.* மருத்துவ ரீதியாக இந்த குறைபாட்டை குணப்படுத்த முடியாது. அறுவை சிகிச்சை, வலியை நீக்க தொடர் கண்காணிப்பு மட்டுமே தீர்வாகும்.