4 வயது பெண் குழந்தையை பலாத்காரம் செய்த 14 வயது சிறுவனுக்கு தண்டனை வழங்கி 7 மணி நேரத்தில் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கடந்த 15 ஆம் தேதி அன்று மத்தியப் பிரதேசத்தில் உள்ள காதியா என்னும் சிற்றூரில் ஒரு 4 வயது பெண் குழந்தை விளையாடிக் கொண்டிருந்துள்ளது. அந்த பகுதியை சேர்ந்த ஒரு 14 வயது சிறுவன் அச்சிறுமியிடம் பேச்சுக் கொடுத்து அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். குழந்தையின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த போது சிறுவன் அங்கிருந்து ஓடி விட்டான்
புகாரை பதிவு செய்த மாவட்ட காவல் அதிகாரி அந்த சிறுவனை ராஜஸ்தானில் உள்ள அவன் உறவினர் வீட்டில் கண்டுபிடித்து கைது செய்து உஜ்ஜைனி சிறுவர் நீதிமன்றத்தில் நிறுத்தினார். சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அந்த சிறுவன் செய்த பாலியல் பலாத்காரம் குறித்த ஆவணங்கள் காலை 10.30 மணிக்கு அளிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திரிபாதி பாண்டே மாலை 6 மணி அளவில் சிறுவனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தனது தீர்ப்பை வெளியிட்டார். வழக்கை சுமார் 7 மணி நேரத்தில் முடித்த நீதிபதிக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும் 5 நாட்களில் குற்றவாளியை கண்டு பிடித்து வழக்கை முடித்த காவல் துறையினருக்கும் வாழ்த்துக்கள் குவிகின்றன.