குழந்தை இல்லாத பெண்களை இலக்கு வைத்து இடம்பெற்று வந்த பாரிய மோசடி சிக்கியது
குழந்தை பிரசவிக்க வாய்ப்பில்லாத பெண்களிடம் கடவுள் துணையுடன் பெற்று கொடுக்கப்படும் மருந்துகள் ஊடாக கருவுறலாம் என கூறி இடம்பெற்றுவந்த பாரிய மோசடி மாத்தறை – நாதுல பிரதேசத்தில் தெரியவந்துள்ளது.
பெண்ணொருவரினால் மேற்கொண்டு வந்த இந்த மோசடியை ஹிரு சி.ஐ.ஏ. குழு அம்பலப்பத்தியுள்ளது.
குறித்த பெண்ணிடம் சிகிச்சைப்பெற்று வந்த பல பெண்கள் பாரிய வயிற்று வலிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனால் பாதிப்படைந்த பெண்கள் பல முறை குறித்த இடத்திற்கு வந்து தமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
தொடர்ந்தும் எதிர்ப்பலைகள் எழுந்த நிலையில், சிகிச்சையளிக்கப்படும் நிலையத்தின் நுழைவாயில் மூடப்பட்டதோடு, முன்னர் சிகிச்சைப்பெற்று வந்த பெண்களுக்கு மாத்திரம் பணம் அறவிடப்பட்டு இரகசியமாக சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் இது குறித்த தகவல் கிடைக்கப்பெற்றதனை தொடர்ந்து, மாத்தறை சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகள், ஹிரு சி.ஐ.ஏ குழுவின் ஊடாக குறித்த இடத்தை சுற்றிவளைத்தனர்.
பின்னர் காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், கடந்த காலங்களில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் அங்கு சிகிச்சைப்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
இதன்போது அங்கு வழங்கப்பட்டுள்ள மருந்துகள் தொடர்பில் குறித்த பெண்ணிடம் வினவிய போது, தனக்கு அவை பற்றி எதுவும் தெரியாது என கூறியமை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பின்னர் குறித்த பெண்ணும் அவருக்கு உதவிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.