குழந்தைகள் தனித்து செயல்படும் போது ஏதேனும் தவறு ஏற்பட்டால் அதில் செய்ய வேண்டிய திருத்தங்கள் குறித்து அவர்களை யோசிக்குமாறு செய்ய வேண்டும்.
குழந்தை வளர்ப்பு முறையில் பெற்றோருக்கிடையே தனிப்பட்ட கருத்துக்கள் இருந்தாலும் தங்கள் குழந்தை யாரையும் சாராமல் தனித்து செயல்பட வேண்டும் என்ற நோக்கம் பொதுவாக இருக்கும்.
குழந்தைகள் 3 வயதிலிருந்தே தங்களை சுற்றி நடக்கும் செயல்களை எளிதாக கிரகிக்க ஆரம்பிப்பார்கள். இந்த வயதிலிருந்தே அவர்களை சுயமாக செயல்பட அனுமதிக்கவும், கற்றுத்தரவும் வேண்டும். இதற்கு சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால் போதும். அதை பற்றி இங்கே பார்ப்போம்.
குழந்தைகள் தனித்து செயல்படுவதற்கு முடிவு எடுக்கும் திறன் அவசியமானது.
உடைகள் விளையாட்டு பொருட்கள் உணவு போன்றவற்றை தேர்வு செய்யும் போது அவர்களின் விருப்பத்தை கேட்டு அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும். அவர்களின் தேர்வு தவறாக இருக்கும் போது அதைப்பற்றி மென்மையாக எடுத்துக்கூறி புரிய வைக்க வேண்டும். இதன் மூலம் அவர்களது முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும்.
தனித்து செயல்படும் போது குழந்தைகளின் தைரியத்தை பாராட்டவேண்டும். அவர்கள் எந்த செயலில் ஈடுட்டாலும் அதன் முடிவை பற்றி கவலைப்படாமல் அதை நிறைவேற்ற எடுக்கும் முயற்சியை ஊக்குவிக்க வேண்டும். முடிவு தோல்வியாக இருந்தாலும் அடுத்த முறை அந்த செயலை சரியாக செய்யும் படி உற்சாகம் அளிக்க வேண்டும். இதன் மூலம் குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்தலாம்.
குழந்தைகள் தனித்து செயல்படும் போது ஏதேனும் தவறு ஏற்பட்டால் அதில் செய்ய வேண்டிய திருத்தங்கள் குறித்து அவர்களை யோசிக்குமாறு செய்ய வேண்டும். அவர்களால் அந்த சிக்கலை சமாளிக்க முடியாத சமயங்களில் மறைமுகமாக உதவ வேண்டும். இதன் மூலம் குழந்தைகளின் சிந்தனையை தூண்ட முடியும்.
வீட்டு வேலைகளிலும் குழந்தைகளின் பங்களிப்பை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். அதன் மூலம் குடும்ப பொறுப்பை அதிகரிக்க செய்ய முடியும். குறிப்பிட்ட வேலையை செய்யும் போது அதை முடிப்பதற்கான நேரத்தையும் நிர்ணயம் செய்ய வேண்டும். அந்த நேரத்திற்குள் வேலையை கண்டிப்பாக முடிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். இதன் மூலமாக குழந்தைகள் தர மேலாண்மையை கற்றுகொள்வார்கள்.
உங்கள் கருத்தை குழந்தைகள் மீது திணிக்காமல் அவர்களின் எண்ண ஓட்டத்தை தெரிந்து கொள்ளுஙகள். இதற்காக தினமும் சிறிது நேரம் செலவழியுங்கள். சாப்பிடும் நேரத்தை கருத்துகளை பரிமாறுவதற்கான நேரமாக மாற்றலாம். அதே சமயம் மற்றவர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் பண்பையும் வளர்க்க வேண்டும்.
குழந்தைகளுக்கு தகுந்த நேரங்களில் உதவுவது பெற்றோரின் கடமையாக இருந்தாலும், சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும். முடிந்தவரை அந்த செயலை அவர்களே முயன்று முடிக்குமாறு செய்ய வேண்டும். இதன்மூலம் மற்றவர்களை சார்ந்திருக்கும் எண்ணம் உருவாகாமல் தானாகவே எந்தவொரு செயலையும் நிறைவேற்றும் வகையில் அவர்களின் மூளை வேகமாக செயல்படும்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]