நடனப்புயல் பிரபுதேவாவின் நடிப்பில் தயாராகி இருக்கும் புதிய படத்திற்கு ‘மை டியர் பூதம்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகிறது.
‘மஞ்சப்பை’, ‘கடம்பன்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் என். ராகவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘மை டியர் பூதம்’.
இந்தப் படத்தில் நடன புயல் பிரபுதேவா குழந்தைகளை வசியப்படுத்தி வைத்திருக்கும் ஜீனி என்ற காமிக்ஸ் கதாபாத்திரத்தில் பூதமாக நடிக்கிறார். இவருடன் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்த மாஸ்டர் அஸ்வந்த் மற்றும் பாரம் குகனேஷ், சாத்விக், சக்தி, கஸீதா ஆகிய குழந்தை நட்சத்திரங்கள் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
இவர்களுடன் நடிகை ரம்யா நம்பீசன், ‘பிக் பொஸ்’ புகழ் ஷம்யுக்தா, இமான் அண்ணாச்சி, சுரேஷ் மேனன், லொள்ளு சபா சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யு.கே. செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு டி இமான் இசை அமைத்திருக்கிறார்.
படத்தைப் பற்றி நடனப்புயல் பிரபுதேவா பேசுகையில், ” இயக்குநர் ராகவன் படத்தின் கதையை விவரித்தவுடன் எனக்கு பிடித்தது. குறிப்பாக ஜீனி என்ற கதாபாத்திரத்தை விரும்பி நடித்து வருகிறேன்.
இந்த கதாபாத்திரத்திற்காக தினமும் இரண்டு மணி நேரம் ஒப்பனை மற்றும் உடை அலங்காரம் நடைபெறும். பொறுமையுடன் காத்திருந்து நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இந்த படத்தில் ‘சென்னை பட்டணம்..’ என்ற ஒரு பாடலுக்கு மீண்டும் குழந்தைகளுடன் நடனமாடி இருக்கிறேன்.” என்றார்.
அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரமேஷ் பி பிள்ளை தயாரித்திருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது. ஃபர்ஸ்ட் லுக்கில் பிரபுதேவாவின் ஜீனி தோற்றமும், வண்ணமயமான பின்னணியும் குழந்தைகளை வசீகரித்து இருப்பதால் இணையதளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]