இதுவரை வந்த தகவல்களின்படி, குழந்தைகளையும் வயதானவர்களையும்தான், கொரோனா வைரஸ் அதிகம் தாக்குகிறது என்பது தெரிகிறது. அதனால், ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம், உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகிய மூன்றும், குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்குக் கொரோனா தடுப்பு வழிமுறைகளை அறிவுறுத்தியுள்ளன.
சிறிய குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் சொல்லிக்கொடுக்க வேண்டியவை…
கொரோனா நம் நாட்டைவிட்டுச் செல்லும்வரை, `உங்கள் நண்பர்களைத் தொடாமல் இருங்கள். உங்கள் கைகளை நீட்டினால் வருகிற தூரத்திற்கு நண்பர்களை விலகி இருக்கச் சொல்லுங்கள். அதுதான் உங்கள் இருவருக்கும் நல்லது’ என்று சொல்லிக்கொடுங்கள்.
பொம்மைகளும் டெமோவும்!
இருமும்போதும் தும்மும்போதும் வாய் மற்றும் மூக்கை எப்படி மறைக்க வேண்டும் என்பதை, அவர்களுடைய பொம்மைகளை வைத்தே டெமோ செய்துகாட்டுங்கள்.
பாட்டும் கைகழுவுதலும்
ஹேண்ட் சானிட்டைஸர் பயன்படுத்தச் சொல்லிக்கொடுங்கள். பாட்டுப்பாடிக்கொண்டே சோப்பு போட்டு கைகளைக் கழுவச் சொல்லுங்கள். மறுக்காமல் சந்தோஷமாகச் செய்வார்கள் குழந்தைகள்.
நோ டச்!
அடுத்தவர்களைத் தொடக்கூடாது, கூட்டமாக நிற்கக்கூடாது, கூட்டம் சேர்கிற இடத்தில் இருக்கக்கூடாது என்று சொல்லிக் கொடுங்கள்.
வண்ணநீரும் கொரோனா வைரஸ் பரவலும்..!
ஸ்பிரே செய்யக்கூடிய பாட்டில்களில் வண்ணம் கலந்த தண்ணீரை ஊற்றி, வெள்ளைத்துணியில் ஸ்பிரே செய்து, வாயையும் மூக்கையும் மூடாமல் இருமினாலும் தும்மினாலும் இப்படித்தான் கொரோனா வைரஸ் பரவும் என்று சொல்லிக்கொடுங்கள்.
க்ளிட்டர் அண்ட் கொரோனா வைரஸ்
சோப் போட்டு கைகளைக் கழுவ மறுக்கும் பிள்ளைகளின் கைகளில் சிறிதளவு க்ளிட்டர்ஸைத் தடவிவிட்டு, வெறும் தண்ணீரால் கழுவச் சொல்லுங்கள். கையெங்கும் ஒட்டிக்கொண்டிருக்கும் க்ளிட்டரைக் காட்டி, இப்படித்தான் கொரோனா வைரஸும் உங்கள் கைகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.
உங்கள் கைகளால் முகத்தைத் தொடுவது, கண்களைக் கசக்குவது, மூக்கில் விரல் நுழைப்பது போன்றவற்றைச் செய்யாதீர்கள். உங்கள் நண்பர்களிடமும் இதைச் சொல்லுங்கள்.
தும்மும்போதும் இருமும்போதும் வாயை டிஷ்யூ பேப்பரால் அல்லது உங்களுடைய கைக்குட்டையால் பொத்திக்கொள்ளுங்கள். இவையிரண்டும் இல்லையென்றால், உங்கள் கைகளின் முட்டிப்பகுதியால் மூக்கையும் வாயையும் பொத்திக்கொள்ளுங்கள். இருமி, தும்மி முடித்ததும் மறக்காமல் கைகளை சோப்பு போட்டுக் கழுவி விடுங்கள். இந்த சுகாதார விஷயங்களை உங்களைவிடச் சிறிய பிள்ளைகளுக்கும் சொல்லிக்கொடுங்கள்.