தங்களை விட இளையவர்கள் மீது அன்பு, அக்கறை கொள்ள வேண்டும் என்பது நாளடைவில்தான் புரியும். ஆனால் அதற்குள் பொறாமை உணர்வு அவர் களுக்குள் வளர்ந்து மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவித்துவிடக்கூடாது. ஒருசில விஷயங்களை புரிய வைப்பதன் மூலம் பொறுப்புணர்வு கொண்டவர்களாக மாற்றி விடலாம்.
பகிர்தல்: அன்பின் அடுத்தக் கட்டம் பகிர்தல். தம்மிடம் உள்ள பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல் என்பது நல்ல பண்பாகும். இந்த பண்பு குழந்தை களிடம் கட்டாயம் இருக்க வேண்டும். பிற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவதன் மூலம் பகிர்தலின் மகிழ்ச்சியை புரியவைக்கலாம். பகிர்ந்து வாழும் குழந்தைகள் மற்றவர்களால் பாராட்டப்படுவார்கள்.
தனிமை: குழந்தைகளை எப்போதும் தனிமைப்படுத்திவிடாதீர்கள். தனிமை அவர்களை எதிர்மறையாக சிந்திக்க தூண்டும். தனக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ என்ற அச்சம் மனதுக்குள் குடிகொண்டுவிடும். அதீத கற்பனை மன நோயாளியாக்கி விடக்கூடும். மனதில் ஏற்படும் காயங்களும், மாற்றங்களும் அவர்களை பாதிக்காமல் இருப்பதற்கு தைரியமான வார்த்தைகளை சொல்ல வேண்டும். அவர்களுக்குள் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்ய வேண்டும்.
குழந்தைகளை எப்போதும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்காதீர்கள். உங் களுக்கு அவர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள், நீங்கள் எந்த அளவுக்கு அவர்கள் மேல் பிரியமாக இருக்கிறீர்கள் என்பதை அவ்வப்போது புரியவையுங்கள். மற்றவர்களை நேசிப்பதால் அவர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஒருபோதும் குறைந்துபோய்விடாது என்பதையும் விளக்கி கூறுங்கள். அது தனிமை எண்ணத்தை போக்க உதவும்.
சகிப்புத்தன்மை: உறவை வளர்ப்பதற்கு சகிப்பு தன்மை வித்திடும். மற்றவர்களை அனுசரித்து போவது சற்று கஷ்டமான விஷயம்தான். அதனால் குழந்தை பருவத் திலேயே பழக்கப்படுத்த வேண்டும். வீட்டில் உள்ளவர்களிடம் இருந்து இந்த பழக்கத்தை ஆரம்பிக்க வேண்டும். அப்போதுதான் வெளி நபர்களிடமும் சகிப்பு தன்மையுடன் பழகும் சுபாவம் உண்டாகும்.
உறவை வளர்த்தல்: உறவுகளின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு புரியவைக்க வேண்டும். உடன் பிறந்தவர்களிடம் எப்படி அன்பாக நடந்து கொள்வது, அவர்களை எப்படி பராமரிப்பது, பாதுகாப்பது போன்ற விஷயங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். அப்படி நடந்து கொண்டால்தான் தாங்கள் காண்பிக்கும் அன்பு தங்களுக்கே திரும்ப கிடைக்கும் என்பதை புரிய வைக்க வேண்டும். நாளடைவில் உறவுகளின் மதிப்பையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள். உறவுகளுக்கு உரிய மதிப்பும், மரியாதையும் கொடுக்கும் வழக்கம் கொண்டவர்களாக வளர்வார்கள். உறவுகள் மத்தியிலும் அவர்களுக்கு நல்ல மதிப்பு உண்டாகும்.
கவனம்: தாய்-தந்தை இருவரும் தங்கள் மேல் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று குழந்தைகள் எதிர்பார்ப்பார்கள். அப்படி இல்லாத பட்சத்தில் பெற்றோர் கவனம் தங்கள் மீது திரும்புவதற்காக விபரீதமான செயல்களில் ஈடுபடுவதற்கும் தயங்கமாட்டார்கள். குழந்தைகள் வெகு நேரம் அமைதியாக இருந்தால் ஏதோ மனக்குழப்பத்தில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். அந்த சமயத்தில் அவர்களிடம் பேச்சு கொடுத்து மனதில் உள்ள குழப்பத்தை நீக்குவதற்கு முயற்சிக்க வேண்டும்.
பொறாமை: தனது முன்னிலையில் சகோதர, சகோதரிகளை பெற்றோர் அர வணைத்து பேசினால் உடனே பொறாமை கொள்வார்கள். பெற்றோர் தன்னை தவிர வேறு யாருடனும் நெருக்கம் காட்டக்கூடாது என்று எதிர்பார்ப்பார்கள். மற்றவர்கள் மீது அன்பு செலுத்தும்போது எங்கே தனக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம்தான் அதற்கு முக்கிய காரணம். அத்தகைய அச்சத்தை போக்கி அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டியது பெற்றோரின் கடமை. ஏனெனில் பொறாமை குணம் மேலோங்கும்போது அன்பு செலுத்தும் நபர்கள், அவர்களுக்கு எதிரிகளாகிவிடுவார்கள். இதனால் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும். ஆரம்பநிலையிலேயே இதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டும்.