குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இந்த ஆண்டும் கொரோனா இரண்டாவது அலைப்பரவலைத் தடுக்கும் விதமாக ஊரடங்கு நீடிப்பதால் பக்தர்கள் பங்கேற்பின்றி கொடை விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் கடந்த ஆண்டு கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் திருவிழாக்கள் பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது.
இந்த ஆண்டும் கொரோனா இரண்டாவது அலைப்பரவலைத் தடுக்கும் விதமாக ஊரடங்கு நீடிப்பதால் பக்தர்கள் பங்கேற்பின்றி கொடை விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆடிக்கொடை விழா நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு மாக்காப்பு அலங்கார தீபாராதனை, 9.15 மணிக்கு வில்லிசை, இரவு 11 மணிக்கு மேல் சாஸ்தா பிறப்பு, தீபாராதனை நடைபெற்றது.
ஆடிக்கொடை விழாவில் நேற்று அபிஷேக அலங்கார தீபாராதனை, பகல் 12 மணிக்கு கும்பம் புறப்படுதல், கும்பம் உள்பிரகாரம் சுற்றி வருதல், தீபாராதனை, மாலை 5.30 மணிக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை, இரவு மேல் கும்பம், தீச்சட்டி புறப்படுதல், உள்பிரகார பவனியைத் தொடர்ந்து படப்பு தீபாராதனை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகள் பக்தர்கள் இன்றி நடைபெற்றது. கோவில் பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
கோவிலுக்கு வெளியே தடுப்புகள் முன்பு நின்றவாறு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்று (புதன்கிழமை) காலை 6 மணிக்கு முளைப்பாரியை தீர்த்தத்தில் கரைத்தல், அலங்கார தீபாராதனை, கும்பம் புறப்பட்டு உள்பிரகாரம் சுற்றி வருதல், மஞ்சள் நீராடுதல், தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. ஆடிக்கொடை ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் கலைவாணன் செய்திருந்தார்.