ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (24) நடைபெற்ற மிகவும் பரபரப்பான 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை ஒரு பந்து மீதமிருக்க ஒரு விக்கெட்டினால் பாகிஸ்தான் வெற்றிகொண்டது.
ஆப்கானிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 301 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவதாக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 49.5 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 302 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
இதன் காரணமாக குர்பாஸ் குவித்த அபார சதமும் ஸத்ரானுடன் ஆரம்ப விக்கெட்டில் அவர் பகிர்ந்த சாதனை மிகு இணைப்பாட்டமும் வீண் போயின.
இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரை பாகிஸ்தான் 2 – 0 என தனதாக்கிக்கொண்டுள்ளது.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான கடைசிப் போட்டி ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் சனிக்கிழமை (26) நடைபெறவுள்ளது.
வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 5 விக்கெட்களை மாத்திரம் இழந்து 300 ஓட்டங்களைக் குவித்தது.
முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 20 ஓவர்களுக்குள் 59 ஓட்டங்களுக்கு சுருண்ட ஆப்கானிஸ்தான் இந்தப் போட்டியில் துணிச்சலுடனும் திறமையாகவும் துடுப்பெடுத்தாடி கணிசமான மொத்த எண்ணிக்கையைக் குவித்தது.
ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான் ஆகியோர் ஆரம்ப விக்கெட்டில் சாதனைமிகு 227 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
பாகிஸ்தானுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஆப்கானிஸ்தான் ஜோடி ஒன்று எந்தவொரு விக்கெட்டுக்காகவும் பகிர்ந்த அதிகூடிய ஓட்டங்கள் இதுவாகும்.
அத்துடன் ஆப்கானிஸ்தானின் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிசிறந்த இரண்டாவது இணைப்பாட்டமாக இது அமைந்தது.
இதற்கு முன்னர் பங்களாதேஷுக்கு எதிராக சட்டோக்ராம் விளையாட்டரங்கில் கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இதே ஜோடியினர் ஆரம்ப விக்கெட்டில் பகிர்ந்த 256 ஓட்டங்கள் எந்தவொரு நாட்டுக்கும் எதிரான ஆப்கானிஸ்தானின் அதிசிறந்த இணைப்பாட்டமாக பதிவானது.
பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில் ரஹ்மானுல்லா குர்பாஸ் 151 பந்துகளில் 14 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 151 ஓட்டங்களைக் குவித்தார். சர்வதேச ஒரு நாள் போட்டி ஒன்றில் அவர் பெற்ற அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும். அத்துடன் இது அவரது 5ஆவது சதமாகப் பதிவானது.
அவருக்கு பக்கபலமாகத் துடுப்பெடுத்தாடிய இப்ராஹிம் ஸத்ரான் 80 ஓட்டங்களைப் பெற்றார்.
அவர்களை விட மொஹமத் நபி 29 ஓட்டங்களையும் அணித் தலைவர் ஹஷ்மதுல்லா ஷஹிதி ஆட்டம் இழக்காமல் 15 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ஷஹீன் ஷா அப்றிடி 58 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நசீம் ஷா, உஸமா மிர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
301 ஓட்டங்கள் என்ற சற்று கடினமான வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவதாக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 49.5 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 302 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
பக்கார் ஸமான், இமாம் உல் ஹக் ஆகிய இருவரும் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து ஓரளவு சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
பக்கார் ஸமான் 30 ஓட்டங்களுடன் வெளியேறிய பின்னர் இமாம் உல் ஹக், அணித் தலைவர் பாபர் அஸாம் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 118 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர்.
ஆனால், பாபர் அஸாம் (53), மொஹமத் ரிஸ்வான் (2), அகா சல்மான் (14), உஸமா மிர் (0), இமாம் உல் ஹக் ஆகிய ஐவரும் 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (211 – 6 விக்.)
திறமையாகத் துடுப்பெடுத்தாடிய இமாம் உல் ஹக் துரதிர்ஷ்டவசமாக 91 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
இப்திகார் அஹ்மத், ஷடாப் கான் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 47 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு நெருக்கடியைக் கொடுத்தனர். ஆனால், இப்திகார் அஹ்மத் 17 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததும் பாகிஸ்தான் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.
அவரைத் தொடர்ந்து ஷஹீன் ஷா அப்ரிடி (4) விரைவாகவே ஆட்டம் இழந்து சென்றார்.
ஒரு பக்கத்தில் திறமையாகவும் புத்திசாதுரியமாகவும் துடுப்பெடுத்தாடிய ஷடாப் கான் 48 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது பந்துவீச்சு எல்லையில் ரன் அவுட் ஆக்கப்பட்டார்.
பஸால்ஹக் பாறூக்கி 2ஆவது பந்தை வீச ஓடியபோது ஷடாப் கான், எல்லைக் கோட்டுக்கு வெளியே சென்றுவிட்டதைக் கண்ட பாறூக்கி பந்துவீசுவதை நிறுத்தி அவரை ரன் அவுட் ஆக்கினார்.
ஆனால், நசீம் ஷாவும் ஹரிஸ் ரவூபும் வெற்றிக்கு மேலும் தேவைப்பட்ட 7 ஓட்டங்களைப் பெற்று பாகிஸ்தானுக்கு பரபரப்பான ஒரு விக்கெட் வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர்.
நசீம் ஷா 10 ஓட்டங்களுடனும் ஹரிஸ் ரவூப் 3 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
பந்துவீச்சில் பஸால்ஹக் பாறூக்கி 69 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மொஹமத் நபி 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.