பாகிஸ்தானில் உள்ள கசூர் நகரில் சமீப காலங்களில் தொடர்ந்து குழந்தைகள் கொல்லப்படுவதற்கு எதிரான போராட்டத்தில் உண்டான கலவரங்களில் இரண்டு போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
புதனன்று, கசூரில் உள்ள காவல் துறை தலைமையகத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்களை நோக்கி காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, அந்த இருவரும் கொல்லப்பட்டனர்.
லாகூரின் தெற்கே 20 மைல் தொலைவில் உள்ள அந்நகரில், சில தினங்களுக்கு முன்பு காணாமல் போன ஜைனப் எனும் ஏழு வயது சிறுமியின் உடல், கடந்த செவ்வாயன்று குப்பைகளுக்கு மத்தியில் கண்டெடுக்கப்பட்டது. அச்சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருந்தார். அதைத் தொடர்ந்து அங்கு போராட்டம் வெடித்தது.
குரான் வகுப்புக்குச் சென்றபோது காணாமல் போன அச்சிறுமியின் உடல் அவரது வீட்டில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது.
கடத்தல்கள், பாலியல் தாக்குதல்கள் மற்றும் கொலைகளுக்கு எதிராக அதிகாரிகள் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இதேபோல 12 கொலைகள் நடைபெற்றுள்ளதாக கசூர் காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கசூர் நகரில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இத்தகைய சம்பவங்கள் நடப்பது போல தோன்றுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஜைனபின் கொலை பாகிஸ்தான் முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. பிரபல கிரிக்கெட் மற்றும் திரைப்பட நட்சத்திரங்கள் கொலையாளிகளை விரைவில் பிடிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.
பாகிஸ்தான் ராணுவமும், காவல்துறைக்கு உதவத் தயார் என்று கூறியுள்ளது.
புகார் தெரிவிக்கப்பட்ட பின்னரும் காவல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தங்கள் உறவினர்களே ஜைனப் காணாமல் போனதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஒரு ஆண் கை பிடித்து அச்சிறுமியை அழைத்துச் செல்லும் காட்சி பதிவாகியுள்ள அந்தக் காணொளி பாகிஸ்தான் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.