குமாரவெல்கம தலைமையில் புதிதாக பதிவு செய்யப்பட்ட புதிய லங்கா சுதந்திரக் கட்சியில் (நவலங்கா நிதாஸ் பக்சய) முக்கிய பதவிகளில் அர்ஜுண மற்றும் சுசில் ஆகியோரை நியமிப்பதற்கு பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.
அண்மையில், ரொரிண்டனில் உள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் இல்லத்தில் முக்கிய கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் குமாரவெல்கம, சுசில் பிரேமஜயந்த, அர்ஜுண ரணதுங்க, அநுரபிரியதர்சன யாப்பா உள்ளிட்ட மேலும் பலர் பங்கேற்றுள்ளனர்.
இதன்போது, கட்சியின் தலைமைக்காரியாலயம் எதிர்வரும் மார்ச் ஐந்தாம் திகதி பத்தரமுல்லையில் திறக்கப்படுகின்ற நிலையில் அதற்கு அடுத்தபடியாக கட்சியின் பொறுப்புக்களை யாரிடம் ஒப்படைப்பது என்பது பற்றி அக்கட்சியின் போசகராக வகிபாகம் கொள்ளவுள்ள சந்திரிகா பண்டாரநாயக்க தலைமையில் ஆராயப்பட்டுள்ளது.
இதன்போது, அர்ஜுண ரணதுங்கவிற்கு பொருளாளர் அல்லது தேசிய அமைப்பாளர் பதவியை வழங்குமாறும், பொதுச்செயலாளர் பதவியில் சுசிலை அமர்த்துமாறும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
எனினும், அவர்கள் இருவரும் உடனடியாக அப்பதவிகளைப் பெற்றுக்கொள்வதாக இணக்கம் வெளியிட்டிருக்கவில்லை. இந்த நிலையில் தொடர்ந்தும் பேச்சுக்கள் இடம்பெற்று வருவதாக அறியப்படுகின்றது.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 300 அமைப்பாளர்கள் வரையில் குமார வெல்கமவுடன் இணைவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக நியமனக் கடிதங்கள் தலைமைக்காரியாலய திறப்பு விழா அன்று வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், தமது கட்சியின் அமைப்பாளர்கள் யாரும் குமார வெல்கமவின் கட்சியில் இணைய முயற்சிகளை கொண்டிருக்கவில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.
இதேநேரம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ருவான் ரணதுங்க உள்ளிட்டவர்கள் வெல்கம தலைமையிலான அரசியல் அணியில் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.