நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்து அண்மையில் டிஜிட்டல் தளத்தில் வெளியான ‘ திட்டம் இரண்டு’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகரும், இயக்குனருமான பாவல் நவகீதனுக்கு பாராட்டுகள் குவிகிறது.
பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘மெட்ராஸ்’ படத்தில் விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் அறிமுகமானவர் நடிகர் பாவல் நவகீதன். இதனைத்தொடர்ந்து ‘குற்றம் கடிதல்’, ‘மகளிர் மட்டும்’, ‘வடசென்னை’, ‘பேரன்பு’ ஆகிய படங்களில் நடித்து சிறந்த குணச்சித்திர நடிகர் என்ற அங்கீகாரத்தை பெற்ற இவர், தற்போது ‘தல’ அஜித் நடிப்பில் தயாராகி வரும் ‘வலிமை’ என்ற படத்திலும், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் ‘பூமிகா’ என்ற படத்திலும், மணிரத்னம் தயாரிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் ‘நவரஸா’ என்ற வலைதள தொடரிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் நடிப்பில் வெளியான ‘திட்டம் இரண்டு’படத்தில் இவருடைய நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள். இது தொடர்பாக இவர் பேசுகையில்,’ சிறிய வேடம், பெரிய வேடம் என்றெல்லாம் பாகுபாடு பார்ப்பதில்லை. ஒரே ஒரு காட்சியில் நடித்தாலும் ரசிகர்கள் மனதில் நிற்க வேண்டும். அவர்கள் பேசும்படி நடிக்க வேண்டும் என்பதுதான் எம்முடைய எண்ணம். ‘திட்டம் இரண்டு’ படத்தின் கதையை இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் விவரிக்கும் போதே என்னுடைய வேடம் ரசிகர்களின் மனதில் நிற்கும் என்று உறுதியாக அவதானித்தேன். அதை படம் வெளியான பிறகு பார்வையாளர்கள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். இதனால் அளவற்ற மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.’ என்றார்.
இதனிடையே நடிகர் பாவல் நவகீதன் ‘V1’ என்ற பெயரில் திரைப்படத்தை இயக்கி இயக்குனராகவும் வலம் வருகிறார் என்பதும், தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடதக்கது.