திருமணமான பெண்களுக்கு குழந்தை பிரசவித்த பின் அவர்களுடைய அடிவயிற்றுப் பகுதியில் உள்ள குடல்வால், பலவீனத்தின் காரணமாகவோ அல்லது அதன் தசை இயக்கத்தில் ஏதேனும் இடையூறுகள் ஏற்பட்டாலோ ஹெர்னியா எனப்படும் குடலிறக்கப் பாதிப்பு உண்டாகும்.
இதற்கு சத்திர சிகிச்சை தான் சிறந்த தீர்வு என மருத்துவர்கள் பரிந்துரைக்கும் நிலையில், எம்மாதிரியான சத்திரசிகிச்சையை மேற் கொள்வது? என்பதில் நோயாளிகளிடையே பெருத்த குழப்பமும், சந்தேகமும் இருந்து வருகிறது.
இதுதொடர்பாக சத்திரசிகிச்சை நிபுணர் பாரி முத்துக்குமார் பேசுகையில், ” ஹெர்னியா எனப்படும் குடலிறக்க பாதிப்பிற்கு உடனடியாக சிகிச்சை பெற வேண்டியது அவசியம். இதற்கு உரிய நேரத்தில் சிகிச்சை பெறாவிட்டால் மலச்சிக்கல், சிறுநீர் வெளியேறுவதில் பாதிப்பு என பிற பாதிப்புகள் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் அதிகம்.
புகைப்பிடிப்பது, மது அருந்துவது, உடல் பருமன் என பல்வேறு காரணங்களால் வயிற்றில் அழுத்தம் ஏற்பட்டு, குடலிறக்கம் எனப்படும் ஹெர்னியா பாதிப்பு ஏற்படலாம்.
மருத்துவர்கள் நோயாளிகளைப் பரிசோதித்த பிறகு, சத்திரசிகிச்சையின் மூலம் இதனை குணப்படுத்தலாம் என பரிந்துரைப்பர். அதன் போது அவர்கள் ஓபன் சர்ஜேரி எனப்படும் திறந்த நிலையிலான சத்திர சிகிச்சை மற்றும் லேப்ராஸ்கோப்பி சர்ஜேரி எனப்படும் நுண்துளை சத்திரசிகிச்சை ஆகிய சத்திர சிகிச்சைகளை குறிப்பிடுவர்.
உடனே எம்மில் சில புத்திசாலி நோயாளிகள், சத்திர சிகிச்சை குறித்த செகண்ட் ஒப்பினியன் எனப்படும் மற்றொரு மருத்துவ நிபுணரிடம் கலந்தாலோசனை பெறுவர்.
இந்நிலையில் ஓபன் சர்ஜேரி விட, லேப்ராஸ்கோபிக் சர்ஜேரி எனப்படும் நுண்துளை சத்திரசிகிச்சை மூலம் இதனை சீராக்கி கொள்வதுதான் சரியான தீர்வு. ஏனெனில் இத்தகைய சத்திரசிகிச்சை மேம்பட்ட பாதுகாப்பான மருத்துவத் தொழில் நுட்பங்களால் கையாளப்படுகிறது. ரத்த இழப்பு குறைவு. வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறுவதற்கான கால அவகாசம் குறைவு. சத்திர சிகிச்சை முடிந்த பிறகு விரைவாக இயல்பான வாழ்க்கை நடைமுறைக்கு திரும்பலாம். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வழிமுறையை தொடர்ந்து பின்பற்றினால் இத்தகைய பாதிப்பிலிருந்து முழுமையாக மீளலாம்,
திறந்த நிலையிலான சத்திர சிகிச்சையை மேற்கொள்ளும் போது அனஸ்தீசியா வழங்குவதிலிருந்து, அவர்களின் இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவது, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது போன்றவை சவாலானதாகயிருக்கும். அவர்கள் சத்திர சிகிச்சைப் பிறகு குணமாவதற்கு நீண்ட நாளாகிறது. சத்திர சிகிச்சைப் பிறகு நோயாளி இயல்பு நிலைக்கு திரும்ப ஒரு மாத காலம் கூட ஆகலாம்.” என குறிப்பிட்டார்.
தொகுப்பு அனுஷா.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]