அணிகள் நிலையில் முதலாம் இடத்திலுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக மும்பை ப்றேபோர்ன் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (6) நடைபெற்ற ஐ பி எல் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 5 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியீட்டியது.
போட்டியின் கடைசி ஓவரில் குஜராத் டைட்டன்ஸ் வெற்றிபெறுவதற்கு 11 ஓட்டங்கள் தேவைப்பட்டதுடன் ராகுல் தெவாட்டியா ஆடுகளத்தில் இருந்ததால் அவ்வணி வெற்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கடைசி ஓவரை மிகச் சிறப்பாக வீசிய டெனியல் சாம்ஸ் 3 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து மும்பை இண்டியன்ஸை வெற்றிபெறச் செய்தார்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்றது.
இஷான் கிஷான், அணித் தலைவர் ரோஹித் ஷர்மா ஆகிய இருவரும் 45 பந்துகளில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
இஷான் கிஷான் 45 ஓட்டங்களையும் ரோஹித் ஷர்மா 43 ஓட்டங்களையும் பெற்றனர்.
மத்திய வரிசையில் டிம் டேவிட் 21 பந்துகளில் 4 சிக்ஸ்கள், 2 பவுண்ட்றிகள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்களைப் பெற்று அணியைப் பலப்படுத்தினார்.
குஜராத் பந்துவீச்சில் ராஷித் கான் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
178 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை 6 ஓட்டங்களால் தவறவிட்டது.
ரிதிமான் சஹாவும் ஷுப்மான் கில்லும் அதிரடியாக ஓட்டங்களைப் பெற்று 73 பந்துகளில் 106 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால் இருவரும் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தல் ஆட்டமிழந்தனர்.
சஹா 55 ஓட்டங்களையும் கில் 52 ஓட்டங்களையும் பெற்றனர். இருவரும் தலா 6 பவுண்டறிகளையும் 2 சிக்ஸ்களையும் அடித்திருந்தனர்.
அணித் தலைவர் ஹர்திக் பாண்டியா (24), சாய் சுதர்ஷன் (14) ஆகிய இருவரும் ஆட்டமிழந்தமை அணிக்கு நெருக்கடியைக் கொடுத்தது.
எனினும் அதிரடிக்கு பெயர்பெற்ற டேவிட் மில்லரும் ராகுல் தெவாட்டியாவும் ஆடுகளத்தில் இருந்ததால் அவர்கள் இருவரும் சாதிப்பார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி ஓவரில் தெவாட்டியா 3 ஓட்டங்களுடன் ரன் அவுட் ஆனதாலும் டெனியல் சாம்ஸ் சிறப்பாக பந்துவீசி 3 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்ததாலும் மும்பை இண்டியன்ஸ் பரபரப்பான வெற்றியை ஈட்டியது.
பந்துவீச்சில் முருகன் அஷ்வின் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.