கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலை பேராசிரியர் செ.யோகராசா இன்று வியாழக்கிழமை (07) கொழும்பில் காலமானார்.
யாழ் வடமராச்சி கரணவாய் கிராமத்தில் பிறந்து, தலவாக்கலையில் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்து, மட்டக்களப்பில் வாழ்ந்து வந்த இவர் 1991 இல் கிழக்குப் பல்கலைக்கழகத்தில், மொழித்துறை விரிவுரையாளராக இணைந்து, 2009இல் பேராசிரியராக நியமனம் பெற்று. 2014 இல் 23 வருட பல்கலைக்கழக பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் காலாண்டுச் சஞ்சிகையாக 1982முதல் வெளியிடப்பட்டுவரும் ‘கிழக்கொளி’யின் ஒவ்வொரு பதிப்பிலும், மட்டக்களப்பு பிரதேச அறிஞர்களைக் கண்டுபிடித்து எமக்கு வெளிக்காட்டிய பெருமைக்குரியவர்.
மிகவும் நிதானமாக ஆராய்ந்து செய்யற்படும் குணாதிசயம் உடையவர் விமர்சனங்களை பண்பாடாகவே முன்வைப்பவர். எளிமையாக பழகும் சுபாபமே அவரது வலிமையாகும். அவர் சந்தித்த எல்லாவித நெருக்கடிகளுக்கும் மத்தியில் தனது இலக்கிய பணியையும், கற்பித்தல் பணியையும் தளராது முன்னெடுப்பவர்.
நல்ல இலக்கியங்களை ஆழ்ந்து ரசிப்பவர். விரிந்த தேடலும் பரந்த வாசிப்பும் அவரது விருப்புகளாகும். பேராசிரியர் இயல்பாகவே மென்மையான மனிதர். உரத்துப் பேசாதவர். ஏத்தகைய கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் எல்லோருடனும் இனிமையாகப் பேசி நல்லுறவைப் பேணும் பண்பாளர். முகம் முறியப் பேசி அறியாதவர்.
பல சர்வதேச நாடுகளில் நடைபெற்ற கருத்தரங்குகளில் கலந்துகொண்டு, பல ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தவர். ஈழத்து இலக்கிய வளர்ச்சியில், குறிப்பாக கிழக்கிலங்கைத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் காத்திரமான பங்களிப்பினை நல்கியமை குறிப்பிடத்தக்கது.