கேகாலையிலும் இரத்தினபுரியிலும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாகாணங்களுக்கு இடையிலான சுதந்திரக் கிண்ண லீக் போட்டிகள் இரண்டும் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தன.
இந்தப் போட்டி முடிவுகளுடன் ஒரு அரை இறுதியில் வடக்கு – கிழக்கு அணிகளும் மற்றைய அரை இறுதியில் சப்ரகமுவ – தெற்கு அணிகளும் விளையாடவுள்ளன.
கிழக்கு மாகாணத்துக்கு எதிராக கேகாலை நகரசபை மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தீர்மானம் மிக்க லீக் போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக் கொண்ட தென் மாகாணம், அரை இறுதிப் போட்டியில் நான்காவது அணியாக விளையாட தகுதிபெற்றுக்கொண்டது.
ஏற்கனவே அரை இறுதி வாய்ப்பை பெற்றிருந்த கிழக்கு மாகாணம் இந்தப் போட்டியில் பிரதான வீரர்கள் ஐவருக்கு ஓய்வு கொடுத்து விளையாடியது.
இதேவேளை, போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டால் அரை இறுதி வாய்ப்பை பெற்றுவிடலாம் என்பதை அறிந்திருந்த தென் மாகாணம் அந்த எண்ணத்தை நிறைவேற்றிக் கொண்டது.
இரண்டு அணிகளிலும் திறமைவாய்ந்த வீரர்கள் இடம்பெற்றபோதிலும் கேகாலை மைதானதம் கால்பந்தாட்டத்துக்கு உகந்ததாக இருக்காததால் வீரர்களின் கால்பந்தாட்ட ஆற்றல்கள் வெளிப்படவில்லை.
இந்தப் போட்டியில் கிழக்கு மாகாணத்துக்கும் தென் மாகாணத்துக்கும் கிடைத்த தலா இரண்டு இலகுவான கோல் போடும் வாய்ப்புகன் தவறவிடப்பட்டன.
இது இவ்வாறிருக்க, இரத்தினபுரி சீவலி மைதானத்தில் நடைபெற்ற வட மாகாணத்துக்கும் தென் மாகாணத்துக்கும் இடையிலான போட்டி 1 – 1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.
ஏற்கனவே அரை இறுதி வாய்ப்பை உறுதிசெய்துகொண்ட வட மாகாணம் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுத்து தென் மாகாணத்துடனான் போட்டியில் விளையாடியது.
இந்த சுற்றுப் போட்டியில் மிக மோசமாக விளையாடிவந்த மேல் மாகாணம், 10 ஆவது நிமிடத்தில் சலன ப்ரேமன்த மூலம் கோல்போட்டு வட மாகாணத்தை அதிரவைத்தது.
இதனை அடுத்து மேல் மாகாணம் ஆறுதல் வெற்றியை ஈட்டுவதற்கு கடுமையாக முயற்சித்தது. ஆனால், போட்டியின் 64 ஆவது நிமிடத்தில் மாற்றுவீரராக களம்புகுந்த வீ. கீதன் 80 ஆவது நிமிடத்தில் வட மாகாணம் சார்பாக கோல் போட்டு தென் மாகாணத்தின் எதிர்பார்ப்பை சிதறடித்தார்.
தொடர்ந்து கடைசி 10 நிமிடங்களில் இரண்டு அணிகளும் வெற்றி கொலை போட கடுமமையாக முயற்சித்தபோதிலும் அது பலனளிக்காததால் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.
இரண்டு கட்ட அரை இறுதிப் போட்டிகள்
வெள்ளிக்கிழமை போட்டி முடிவுகளுடன் கிழக்கு மாகாணமும் வட மாகாணமும் தோல்வி அடையாத அணிகளாக அரை இறுதிகளுக்கு முன்னேறின.
இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாம் கட்ட அரை இறுதிப் போட்டி எதிர்வரும் 26ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும் இரண்டாம் கட்ட அரை இறுதிப் போட்டி மார்ச் 1 அல்லது 2ஆம் திகதி அம்பாறையிலும் நடைபெறவுள்ளது.
இதேவேளை, அரை இறுதிக்கு முதலாவது அணியாக தெரிவானதும் அணிகள் நிலையில் இதுவரை தோல்வி அடையாமல் முதலிடத்தில் உள்ளதுமான சப்ரகமுவ மாகாணத்தை, இரத்தினபுரி சீவலி மைதானத்தில் ஊவா மாகாணம் இன்று எதிர்த்தாடவுள்ளது.
மற்றொரு போட்டியில் ரஜரட்ட அணியை கேகாலை நகர சபை மைதானத்தில் மத்திய மாகாணம் சந்திக்கவுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்துக்கும் தென் மாகாணத்துக்கும் இடையிலான முதலாம் கட்ட அரை இறுதிப் போட்டி எதிர்வரும் 25ஆம் திகதி காலியில் நடைபெறவுள்ளதுடன் இரண்டாம் கட்ட அரை இறுதிப் போட்டி மார்ச் 1 அல்லது 2ஆம் திகதி இரத்தினபுரியில் நடைபெறும்.
இந்த இரண்டு கட்ட அரை இறுதிப் போட்டிகளில் நிகர கோல்கள் அடிப்படையில் அல்லது பெனல்டி முறையில் வெற்றிபெறும் இரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் விளையாட தகதிபெறும். இறுதிப் போட்டிக்கான திகதியும் இடமும் பின்னர் அறிவிக்கப்படும்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]