கிழக்கில் நடப்பது இராணுவ ஆட்சியா? முதலமைச்சர் எதற்கு?
கிழக்கு மாகாண முதலமைச்சர் கடற்படை அதிகாரியை திட்டியது குறித்து இந்த நாட்டில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஆர்ப்பாட்டங்கள் கண்டன அறிக்கைகள் தடைகள் விமர்சனங்கள் என சிங்கள பெரும்பான்மை அரசாங்கத்தின் இராணுவ ஆழுகை அல்லது இராணுவ தலையீடுகள் இந்தவிடயத்தின் ஊடாக உலகிற்கு பூதாகரப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே வடக்கின் சிவில் நிர்வாகத்தில் இராணுவ தலையீடுகள் அதிகரித்துள்ளது எனவுமட வடக்கில் இராணுவ ஆட்சி நடைபெறுவதாகவும் வடக்கின் ஆளுனர் அத்துமீறி செயற்படுகின்றார் என கூறப்பட்டு அது சர்வதேச ரீதியில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் வடக்கின் ஆளுனரை அரசாங்கம் மாற்றியிருந்தது.
அனைவரும் அறிந்ததே.இன்நிலையில் கிழக்கில் பல காலமாக அவ்வாறானதொரு நிலை இருந்தும் கிழக்கு முதலமைச்சர் அரசுக்கு முட்டுக்;கொடுத்துக்கொண்டிருந்ததால் இவற்றையெல்லாம் வெளிக்காட்டாது கிழக்கில் சிறந்த சிவில் நிர்வாகம் நடைபெறுவதாக வெளிக்காட்டி வந்திருந்தார்.
உண்மையில் கிழக்கு மாகாணத்தின் சிவில் நிர்வாகத்தை தீர்மானிக்கின்றவர்களாக ஆளுனர் மற்றும் அரசாங்க அதிபர்கள் முப்படை அதிகாரிகள் ஆகியோரே இருக்கின்றனர்.
என்னதான் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனநாயக ரீதியான அரசியல் தலைவர்கள் இருந்தாலும் அவர்களினால் கிழக்கு மாகாண நிர்வாகத்தில் ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் தலையீடு செய்யமுடியாது என்பதையே முதலமைச்சரின் இந்த சம்பவம் எடுத்துக்காட்டியுள்ளது.
அதாவது கிழக்கிலும் எழுதப்படாத ஒரு இராணுவ ஆட்சியை ஒத்த நிர்வாகமே நடைபெற்றுவருகின்றது என்பதையே கடற்படை அதிகாரியின் நிகழ்வு எடுத்துக்காட்டியுள்ளது.
பலகாலமாக நீறுபூத்த நெருப்பாக இருந்துவந்த கிழக்கு முதலமைச்சரின் நிர்வாக ரீதியான அதிகாரப்பிரச்சினை இப்போது பூதாகரமாக வெடித்துள்ளது.
இலங்கையின் அதிகாரப்பரவலாக்கம் என்பது எப்படி இருக்கின்றது என்பதற்கு இந்த சம்பவத்தை ஒரு சிறந்த உதாரணமாக எடுத்துக்கொள்ள முடியும்.
இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்கு மாகாணசபை அதிகாரங்கள் போதும் என்று கூறுகின்றவர்களுக்கு இது ஒரு சாட்டையடியாகவே அமைந்திருக்கும்.
இந்த நாட்டில் ஒரு முதலமைச்சருக்கு எந்த அதிகாரமும் இல்லை ஒரு சிறுபான்மை இன மாகாணத்தின் முதலமைச்சரை மத்திய அரசின் நிர்வாகம் எப்படி முடக்குகின்றது எப்படி தனிமைப்படுத்துகின்றது என்பதற்கு இந்த சம்பவமே ஒரு சாட்சி.
பாடசாலை நிகழ்வு ஒன்றை கடற்படைஅதிகாரி தலைமை தாங்கி நடத்தியது சரியா?
முதலில் ஒரு மாகாண நிர்வாகத்திற்குள் இருக்கின்ற பாலர் பாடசாலை ஒன்றின் நிகழ்வை கடற்படையினரும் ஆளுநரும் உதவி வழங்கிய அமெரிக்க பிரதிநிதிகளும் இணைந்து நடத்தியுள்ளனர்.
இந்த நிகழ்வுக்கு கல்வி அமைச்சரையோ அல்லது முதலமைச்சரையோ அழைக்கவில்லை என்பதே பிரச்சினைக்கு காரணம் என கூறப்படுகின்றது.
உண்மையில் அமெரிக்காவின் அந்த உதவித்திட்டம் யாரூடாகவழங்கப்பட்டிருந்தது கடற்படை இதற்குள் எவ்வாறு நுழைந்தது இந்த நிகழ்வுக்கு ஆளுனரை மாத்திரம் அழைத்ததற்கான காரணம் என்ன? போன்ற பல கேள்விகள் இந்த சம்பவத்தின் பின்னனியில் மறைந்துகிடக்கின்றது.
வெளிநாட்டில் இருந்து உதவும் அமெரிக்கபோன்ற நாடுகள் தங்களது உதவிகள் அரசியல்வாதிகளின் ஊடாக செய்யப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ளனவா? அல்லது அரசாங்க அதிபர் முப்படைகள் மற்றும் ஆளுநருக்கு ஊடாக மட்டுமே உதவித் திட்டங்களை செய்யப்படவேண்டும் அந்த உதவிதிட்ட நிகழ்வுகளுக்கு அரசியல் தலமைகளை அழைக்கக்கூடாது என்ற அழுத்தங்கள் உதவி வழங்கும் நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளதா? போன்ற சந்தேகங்களை முதலமைச்சரின் ஆதங்கம் இன்று கிழக்கில் ஏற்படுத்தியுள்ளது.
இதைவிட இன்று இலங்கையில் உள்ள பெரும்பான்மையின மக்கள் மற்றும் அரசாங்கம் என்பன ஒரு மாகாணத்தின் முதலமைச்சரை தரக்குறைவாக மாற்றி முப்படைகளையும் உயர்வாக பேசி வருவதானது இலங்கை அரசாங்கம் இன்னமும் இராணுவத்தின் பால் மிகுந்த ஈர்ப்புக்கொண்டுள்ளதுடன் இந்த நாட்டில் சிவில் நிர்வாகங்களை காட்டிலும் இராணுவத்திற்கே முன்னுரிமை வழங்கப்படுகின்றது என்பதையே எடுத்துக்காட்டியுள்ளது.
உலகின் பல நாடுகளில் உள்ள மக்கள் தங்களது நாட்டு இராணுவத்தை கண்களில் காண்பதென்பது மிக அரிதானதாக இருக்கும் இராணுவம் எப்போதும் நாட்டின் எல்லையிலும் போர் நடைபெறுகின்ற இடங்களிலுமே தங்களது கடமைகளை செய்வது வழமை.
ஆனால் இலங்கையில் மாத்திரம் முப்படைகளும் அனைத்து சிவில் நிர்வாகங்களிலும் பங்கேடுப்பதானது இந்த நாடு மறைமுக இராணுவ ஆதிக்கத்திற்குள் இருக்கின்றது என்பதையே எடுத்துக்காட்டியுள்ளது.
மிக முக்கியமாக முப்படைகளின் தளபதிகளும் அரசாங்கத்தின் எந்த அனுமதியையும் பெறாது கிழக்கு முதலமைச்சரை முப்படைகளின் நிகழ்வுகளில் கலந்துகொள்ள முடியாது எனவும் முப்படைகளின் தளத்திற்குள் பிரவேசிக்க முடியாது என தடை உத்தரவு பிறப்பித்துள்ளமையானது இந்த நாட்டில் முப்படைகளும் தனித்துவமாக செயற்படுகின்றதான தோற்றப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் மாற்றம் ஏற்படும்வரை நல்லாட்சி என்பது எழுத்திலும் வார்த்தைகளிலும் இருக்குமே தவிர நாட்டின் சிவில் நிர்வாகத்திற்குள் ஏற்படாது என்பதே திண்ணம்.