இலங்கை அரசு எனப்படுகிற சிங்களப் பெருந்தேசிவாத சக்தி 1985 தொடக்கம் திட்டமிட்டு உருவாக்கிய தமிழ்- முஸ்லிம் முரண்பாடுகளின் ஊடாக, வடகிழக்கில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களை அதே வாழிடத்தில் பெரும்பான்மையாக வாழுகிற தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகப் பாவித்தது.
கிழக்கில் பிராந்திய அரசியல் வல்லமையை நிரூபிக்க வேண்டும் என்று அங்கு கிட்டத்தட்ட சம பலமுடையனவாய் திகழும் தமிழர் அரசியலும் முஸ்லிம் அரசியலும் விரும்புகின்றன போல் தெரிகிறது.
எவ்வாறு வடகிழக்கு சிறுபான்மையை, அப்பிராந்திய பெரும்பான்மையினத்தின் நலனுக்கு எதிராகப் பயன்படுத்த திட்டம் தீட்டப்பட்டதோ அதே வடிவில் புதிய முயற்சி ஒன்று எடுக்கப்படுவது போல் தெரிகிறது.
கிழக்கில் தத்தமது அரசியல் பலத்தை நிரூபிக்க விரும்பும் அப்பிராந்தியத்தின் தமிழ் முஸ்லிம் அரசியல் சக்திகளின் திட்டத்தைப் புரிந்துகொண்ட ஸ்ரீலங்காவின் பெருந்தேசிய சக்தி, அங்கு சிறுபான்மையாக வாழும் சிங்களவர்களை கிழக்குப் பிராந்தியத்தின் அதிகாரத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக்குவதற்கு முனைகிறது.
இதன் விளைவு எப்படியிருக்கும் என்பதை வாழைச்சேனையில் பேரூந்து தரிப்பிடம் நிறுவும் போது ஏற்பட்ட தமிழ் முஸ்லிம் முரண்பாட்டின் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.
தமிழ்ப் பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கான வியாபாரத் தடை மற்றும் முஸ்லிம் பிரதேசங்களில் தமிழ்த் தொழிலாளர் பிரவேசிக்க தடைவிதிக்கும் முயற்சி என்பன ஒரு மிகப் பெரிய தமிழ் முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்துவதற்கான ஒத்திகையாக இருக்கலாம்.
கிழக்குத் தமிழ் முஸ்லிம் மக்கள் இக்காலகட்டத்தில் மிகவும் அவதானமாகவும், புரிந்துணர்வோடும் இருப்பது மிகவும் அவசியமாகும்.
ஞானசார தேரர், அவரின் ஞானோபதேசகர்களால் தற்போது காலாவதி ஆக்கப்பட்டுவிட்டார். எனவே, இந்த புதிய சூழலில் தமிழ் முஸ்லிம் மக்கள், தமது கைகளைக் கொண்டு தமது கண்களையே குத்திக் குருடாக்கும் திட்டத்தைப் புரிந்துகொண்டு இயங்கவேண்டும்.
கிழக்கில், ஓரினத்து உள் முரண்பாடுகளைத் தூண்டிவிடும் உபாயமாக ஊர்வாதம் உபயோகிக்கப்பட வாய்ப்புள்ளது. இதில் முஸ்லிம்களே அதிகமாக அவதானத்துடன் இருத்தல் வேண்டும்