நாட்டில் திரிபடைந்த டெல்டா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 19 நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
இந்த புதிய தொற்றாளர்கள் கொழும்பு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று பிரதி சுகாதாரசேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியநிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
அதன்படி கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட சில பகுதிகளிலும் பிலியந்தலை பகுதியிலும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை இதுவரை கண்டறியப்பட்ட கொவிட் – 19 வைரஸ் திரிபுகளில் அதிக வீரியம் கொண்டதும் அதிகளவானோருக்கு இலகுவாகப் பரவக்கூடியதுமான இந்த டெல்டா வைரஸின் பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது அவசியமாகும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதன்முதலாக அதிகவீரியம் கொண்ட டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் ஐவர் கொழும்பில் தெமட்டகொட பகுதியில் அடையாளங்காணப்பட்டனர்.
அதனைத்தொடர்ந்து மாதிவெல பிரதேசத்தில் 53 வயதுடைய பெண்ணொருவருக்கு திரிபடைந்த டெல்டா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை கொவிட் – 19 தடுப்பூசி வழங்கலை செயற்திட்டத்தைப் பொறுத்தவரை, இலங்கை எதிர்பார்த்துள்ள அடைவுமட்டத்தை எட்டுவதற்கு அவசியமான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்கத்தயாராக இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அலகா சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் அரசாங்கத்தின் கொவிட் – 19 தடுப்பூசி வழங்கல் செயற்திட்டத்தின்கீழ் நாடளாவிய ரீதியில் 30 வயதிற்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி வழங்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தொற்றாளர்களும் மரணங்களும்
அதேவேளை வியாழக்கிழமை 967 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருப்பதுடன் 50 கொவிட் – 19 மரணங்களும் பதிவாகியுள்ளன. இவை நேற்று புதன்கிழமை பதிவானவையாகும்.
அதன்படி நாடளாவிய ரீதியில் அடையாளங்காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 275,589 ஆக உயர்வடைந்திருப்பதுடன், தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,661 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இன்று காலை 10 மணிவரையான தகவல்களின்படி தொற்றாளர்களில் 253,953 பேர் முழுமையாகக் குணமடைந்திருப்பதுடன் 21,495 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.