கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் 08.12.2017 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு மாவட்ட கூட்டுறவாளர் மண்டப வளாகத்தில் வட மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தினால் நடத்தப்பட உள்ளது.
மாவட்ட அலுவலர் வே.தபேந்திரன் தலைமையில் நடைபெற உள்ள நிகழ்வில் பிரதேச செயலக பிரிவுகளில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
நடமாட முடியாத நபர்களுக்கான முச்சக்கர வண்டி ஓட்டம் , விழிப்புலனற்றவர்களுக்கான பலூன் ஊதி உடைத்தல், செயற்கை கால் பொருத்தியவர்களுக்கான வேகநடை , காது கேளாத வாய் பேசாத நபர்களுக்கான 100 மீற்றர் ஓட்டம், நீர் நிரப்புதல் போன்ற போடடிகள் ஆண் ,பெண் பிரிவாக நடைபெற உள்ளது.
முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறுபவர்களுக்குரிய பரிசில்கள் எதிர்வரும் 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வவுனியாவில் நடைபெற உள்ள வட மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழாவின் போது வழங்கப்பட உள்ளது.
வருடா வருடம் மாற்றுத் திறனாளிகளுக்கான மேற்படி விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட மட்டத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.