கிளிநொச்சி – ஆனைவிழுந்தான் குளத்தின் அணைக்கட்டு சேதமடைந்து காணப்படுவதுடன் காட்டு யானைகளாலும் குறித்து அணைக்கட்டின் சில இடங்களில் சேதப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி – ஆனைவிழுந்தான் குளத்தின் நீர்மட்டம் உயர்வடைந்து கடந்த 10 நாட்களுக்கு மேலாக வான் பாய்ந்து வருகின்றது.
இந்த நிலையில், குளத்தினுடைய அணைக்கட்டு நீண்ட காலம் புனரமைக்கப்படாது சேதமடைந்து காணப்படுவதுடன் காட்டு யானைகளாலும் அணைக்கட்டின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளன.
அத்துடன் குறித்த அணைக்கட்டின் பல இடங்களில் நீர்க்கசிவு ஏற்பட்டு குளத்து நீர் வெளியேறி வருகின்றது. இவ்வாறு காணப்படுவதனால் மேலதிகமாக நீர் வரத்து அதிகரிக்குமானால் குளம் உடைப்பெடுக்கும் சூழல் காணப்படுவதாகவும் விவசாயிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
குறித்த குளத்தின் புனரமைப்பு பணிகள் உரிய காலத்தில் மேற்கொள்ளப்படாததால் இவ்வாறு அணைக்கட்டும் சேதமடைந்து காணப்படுவதனால் இக்குளம் உடைப்பெடுக்குமானால் இக்குளத்தின் கீழான நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்களும் நன்னீர் மீன்பிடியை நம்பி வாழும் 28 மீனவ குடும்பங்களும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டி உள்ளனர்.
1983 காலப்பகுதியில் மலையகத்தில் ஏற்பட்ட வன்செயல் காரணமாக இடம்பெயர்ந்து குறித்த பிரதேசத்திலேயே குடியேறி இருக்கின்ற தாங்கள் இந்த குளத்தை நம்பியும் இதன் கீழான வயல் நிலங்களை நம்பியும் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் இருக்கின்ற 400 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல் நிலங்கள் வளத்தினரால் எல்லையிடப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும் இவ்வாறு தங்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு குறித்த காணிகளையும் விடுவித்து தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.