கிளிநொச்சி – பூநகரி பிரதேசத்தில் மக்களுக்கான குடிநீர் வழங்குவதற்குரிய போதிய வளங்கள் இன்மையால் மக்களுக்கான குடிநீர் விநியோகத்தில் நெருக்கடிகளை எதிர்கொள்வதாக பூநகரி பிரதேச சபையினுடைய செயலாளர் எம்.இராஜாகோபால் தெரிவித்துள்ளார்.
பூநகரி பிரதேசத்தில் பல்வேறு பகுதிகளிலும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதாகவும், தமக்கான குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
குறிப்பாக பூநகரிப் பிரதேசத்தில் 11 இற்கும் மேற்பட்ட கிராமஅலுவலர் பிரிவுகளுக்கு தினமும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருவதாகவும், தமக்கான குடிநீரை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறும் குடிநீர்த் தேவை நிலவும் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், இது தொடர்பில் பூநகரி பிரதேச சபையினுடைய செயலாளர் எம்.இராஜகோபாலிடம் கேட்டபோது,
ஏற்கனவே பூநகரி பிரதேச சபையால் தொடர்ச்சியாக குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இவ்வாறு குடிநீர் விநியோகத்தை மேற்கொள்வதற்கு வாகன வசதி மற்றும் சாரதிகள் பற்றாக்குறைகள் காணப்படுகின்றன.
இவ்வாறு நெருக்கடிகள் காணப்படுகின்ற போதும், இருக்கின்ற வளங்களை பயன்படுத்தி குடிநீர் விநியோகத்தை மேற்கொண்டு வருகின்றோம்.
கடந்த ஆண்டு வறட்சியின் போது, அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் பிரதேச செயகம் ஊடாக குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு நிறுத்தப்பட்ட பகுதிகளிலேயே குடிநீர்த் தேவை காணப்படுகின்றது. தற்போது பிரதேச செயலகத்திடம் 12,500 லீற்றர் நீர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் பவுசர் ஒன்றைக் கோரியிருக்கின்றோம்.
அது கிடைக்கும் பட்சத்தில் அந்தப் பகுதிகளுக்கான குடிநீர் விநியோகத்தையும் மேற்கொள்ளமுடியும் என குறிப்பிட்டுள்ளார்.