இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர்கள் சிலர் 2020/2021 பருவக்காலத்துக்கான கிரிக்கெட் ஒப்பந்தத்துக்கு மறுப்புத் தெரிவித்துள்ளமை தொடர்பான செய்திகள் வெளிவருகின்றமை குறித்து நாளைய தினம் (19) முழு நாட்டுக்கும் கூறுவதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் முகாமைத்துவ குழுவித் தலைவர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்தார்.
குறித்த ஒப்பந்தத்தின் ஊடாக சிரேஷ்ட வீரர்களின் சம்பளம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த வீரர்கள் ஒப்பந்தத்துக்கு கையொப்பமிடுவதற்கு மறுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புதிய ஒப்பந்தத்தின்படி சிரேஷ்ட வீரர்களான எஞ்சலோ மெத்தியூஸ், தினேஷ் சந்திமால், திமுத் கருணாரட்ண, சுரங்க லக்மால் ஆகியோரின் சம்பளம் 50 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த வீரர்கள் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். மேலும், எந்த தரத்தின் அடிப்படையில் இவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளமை குறித்து தமக்கு தெரியவில்லை எனவும் சிரேஷ்ட வீரர்கள் தமது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் முகாமைத்துவ குழுவித் தலைவர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா,
“எதிர்வரும் 20 ஆம் திகதியன்ற நடைபெறவுள்ள கிரிக்கெட் சபை தேர்தலின் பின்னர் தமது குழுவின் சேவைக்காலம் முடிவடைவதுடன், அதன் பின்னர் புதிய நிர்வாகக் குழுவின் ஊடாகவே புதிய முகாமைத்துவ குழு அமைக்கப்படும். எனினும், வீரர்களின் புதிய ஒப்பந்தம் குறித்து நாளை புதன்கிழமை ஊடகயியலாளர் சந்திப்பொன்றை நடத்தி தெளிவுபடுத்துவோம்” என்றார்.
அரவிந்த டி சில்வா தலைமையிலான கிரிக்கெட் தொழில்நுட்ப குழுவினால் கிரிக்கெட் வீரர்களின் திறமைகளை அடிப்படையாகக் கொண்டே புதிய ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.