பீகாரில் காதலியை சந்திக்க எலக்ட்ரீசியன் செய்த செயலால் அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கடுப்பாகியுள்ளனர்.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக நிலக்கரி தட்டுப்பாட்டால் பல்வேறு மாநிலங்களில் தற்போது அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் நிகழ்ந்து வருகின்றன. ஏற்கனவே கோடை வெப்பமும் வாட்டி வருவதால் பொதுமக்கள் இந்த மின்வெட்டால் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இதனிடையே பீகார் மாநிலத்தில் உள்ள பூர்ணியா மாவட்டம் கணேஷ்பூர் கிராமத்தில் மட்டும் இரவில் தினமும் 2 முதல் 3 மணிநேரம் தொடர்ந்து மின்சாரம் தடைப்பட்டு வந்தது. இதன் காரணம் குறித்து கிராம மக்கள் ஆராய்ந்தபோது அதிர்ச்சியான தகவல் ஒன்று கிடைத்தது. அதாவது மின்சாரத்தை துண்டிக்கும் நபர் இளம்பெண் ஒருவரை சந்திக்க முயற்சிக்கும் விஷயம் தெரியவந்தது.
பக்கத்து கிராமத்தில் மின்சாரம் இருப்பதை பார்த்து விட்டு இந்த விபரீத செயலில் ஈடுபடும் நபர் யார் என்பதை கையும் களவுமாக பிடிக்க கிராம மக்கள் முயற்சித்தனர். அப்போது கிராமத்தில் உள்ள ஒரு எலக்ட்ரீசியன் மின்சாரத்தை துண்டித்துவிட்டு அங்குள்ள அரசுப் பள்ளியை நோக்கி சென்றதை பார்த்துள்ளனர். இதையடுத்து கிராம மக்கள் பள்ளி நோக்கி சென்று பார்த்த போது அங்கு எலக்ட்ரீசியன் தனது காதலியை இருட்டுக்குள் சந்தித்து மகிழ்ச்சியாக இருந்துள்ளார். இதையடுத்து எலக்ட்ரீசியன் மற்றும் அவரது காதலியை கிராம மக்கள் கையும், களவுமாக பிடித்தனர்.
இதையடுத்து எலக்ட்ரீசியனை கூட்டிச் சென்ற கிராம மக்கள் மின் இணைப்பை சரி செய்தனர். பின் கிராம நிர்வாகத்தின் உறுப்பினர்கள் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது., இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.