கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் இலங்கையர் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.
உலக அமைதிக்கான ஓட்டம் எனும் தொனிப்பொருளின் கீழ் 72 நாடுகளில் 4000 கிலோ மீற்றர் தூரம் ஓடி கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் அவர் ஈடுப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் கனேடியப் பிரஜாவுரிமை பெற்றவருமான சுரேஷ் ஜோகிங் என்பவரே இந்த கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
123 நாட்களில் 72 நாடுகளில் 4000 கிலோ மீற்றர் தூரம் ஓடி கின்னஸ் சாதனை படைப்பதே இவரது இலக்காகும்.
கடந்த நத்தார் பண்டிகையன்று பலஸ்தீனத்தில் பயணத்தை ஆரம்பித்த இவர் அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, இஸ்ரேல் உள்ளிட்ட 24 நாடுகளில் இதுவரை ஓடியுள்ளார்.
நேற்றுமுன் தினம் கொழும்பு காலி முகத்திடலில் மாலை 4 மணிக்கு ஓட்டப் பயணத்தை ஆரம்பித்த அவர் 21.1 கிலோ மீற்றர் தூரம் ஓடினார். கையில் பனையோலைத் துண்டொன்றை வைத்துக்கொண்டே சுரேஸ் ஜோகிங் ஓடுகின்றார்.
பனை சகல விதத்திலும் மனிதனுக்கு பயன்படுகின்றது, அதுபோன்றே மனிதர்களும் பயனுடையவர்களாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார்.
நேற்று மாலை 3 மணியளவில் தாம் பிறந்த இடமான வவுனியா சூசைப்பிள்ளையார் குளத்தில் ஓட்டப் பயணத்தை ஆரம்பித்த சுரேஸ் ஜோகிங், கிளிநொச்சியூடாக யாழ்ப்பாணம் இளவாலை பகுதிக்கு சென்று பயணத்தை முடித்துக்கொண்டார்.
யாழ்ப்பாணத்தில் இன்று ஓடத் தயாராகவுள்ள அவர் தாம் கல்வி பயின்ற புனித பத்திரிசியார் கல்லூரிக்கு செல்வதுடன் இலங்கைக்கான ஓட்டப் பயணத்தை முடிக்கவுள்ளார்.