கினிய சிறப்புப் படைகள் ஞாயிறன்று நடத்திய சதிப்புரட்சியில் அதிகாரத்தைக் கைப்பற்றியதுடன், ஜனாதிபதியை கைது செய்து, ஏழை மேற்கு ஆபிரிக்க நாட்டில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளன.
“ஜனாதிபதியை கைதுசெய்த பிறகு, அரசியலமைப்பைக் கலைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்” என்று AFP செய்திச் சேவைக்கு அனுப்பப்பட்ட காணொளியில் இராணுவ வீரர்கள் துப்பாக்கி ஏந்தியவாறு தெரிவித்துள்ளனர்.
முன்னர் வெளியான காணொளியில் 83 வயதான ஜனாதிபதி ஆல்பா கான்டே இராணுவத்தினரால் சூழப்பட்ட ஒரு சோபாவில் அமர்ந்திருப்பதை வெளிக்காட்டியது. அவர் இருக்கும் இடம் தெளிவாக தெரியவில்லை.
தற்சமயம் கினியாவில் அரசாங்கம் கலைக்கப்பட்டு நில மற்றும் வான் எல்லைகள் மூடப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை தேசிய தொலைக்காட்சி சேவையை கைப்பற்றிய சிறப்பு படைகள், “மறு அறிவிப்பு வரும் வரை” நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை விதிப்பதாகவும், ஆளுநர்கள் இராணுவத்தால் மாற்றப்படுவார்கள் என்றும் கூறியது.
கினிய குடியரசு கணிசமான கனிம வளங்களை கொண்டுள்ள போதிலும், உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகும். சுமார் 13 மில்லியன் மக்கள் வாழும் நாடு நீண்ட காலமாக அரசியல் ஸ்திரமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளது.