தமிழில் வேகமாக வளர்ந்து வரும் நட்சத்திர நடிகர்களான காளிதாஸ் ஜெயராம் – அர்ஜுன் தாஸ் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘போர்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி இருக்கிறது. எதிர்வரும் மார்ச் மாதம் முதல் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ் மற்றும் இந்தி மொழியில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தை நடிகர் ஆர்யா வெளியிட்டு, பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் பிஜாய் நம்பியார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘போர்’ திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், டி.ஜே. பானு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் திரைக்கதையை பிஜாய் நம்பியார், மிதிலா ஹெக்டே, பிரான்சிஸ் தோமஸ், நீல் ஜூலியன் பல்தாசர் ஆகியோரும், கூடுதலான திரைக்கதையை அனிருத் ரமேஷ் மற்றும் எல். சரஸ்வதி ஆகியோர் இணைந்து எழுத, வசனங்களை விக்னேஷ் ஸ்ரீகாந்த் எழுதி இருக்கிறார். ஜிம்ஸி காலித் மற்றும் பிரேஸ்லே ஆஸ்கார் டிசோசா ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹரிஷ் வெங்கட், சச்சிதான சங்கரநாராயணன் மற்றும் கௌரவ் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை டிசிரீஸ் நிறுவனம், ரூக்ஸ் மீடியா மற்றும் கேட்வே பிக்சர்ஸ் பட நிறுவனங்கள் சார்பில் பிரபு அண்டனி, மது அலெக்ஸாண்டர், பிஜாய் நம்பியார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து மார்ச் மாதம் வெளியாகும் இப்படத்தின் முன்னோட்டத்தில் கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் காளிதாஸ் ஜெயராம் அடிக்கடி சென்னை மக்களின் ஃபேவரைட்டான ‘கெட்ட’ வார்த்தையை பேசுவது ஒரு தரப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.மேலும் இளமையான காட்சிகளும், காதலர்களுக்கு இடையேயான நெருக்கமான காட்சிகளும், எக்சன் காட்சிகளும் இடம் பெற்றிருப்பதால்… ‘போர்’ திரைப்படத்தின் முன்னோட்டம், இளைய தலைமுறையினரிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.