றினோன் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டுவரும் கால்பந்தாட்டம் மூலம் ஒற்றுமை கனிஷ்ட கால்பந்தாட்ட லீக்கின் இரண்டாம் கட்டப் போட்டிகளில் றினோன் ப்ளூஸ், கலம்போ கிக்கர்ஸ் ஆகிய அணிகள் வெற்றிபெற்றுள்ளன.
கிருலப்பனை, லலித் அத்துலத்முதலி மைதானத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கால்பந்தாட்ட பயிற்சிஙகங்களுக்கு இடையிலான இரண்டாம் கட்டப் போட்டிகளை ஹென்றி பேத்ரிஸ் கால்பந்தாட்டப் பயிற்சியகம் முன்னின்று நடத்தியது.
இலங்கையில் கால்பந்தாட்டம் மூலம் ஒற்றுமை என்ற கருப்பொருளில் கனிஷ்ட கால்பந்தாட்ட லீக் நடத்தப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
சனிக்கிழமை நடைபெற்ற ஒரு போட்டியில் குறே கால்பந்தாட்ட பயிற்சியகத்தை 5 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் றினோன் கால்பந்தாட்ட பயிற்சியக ப்ளூஸ் அணி மிக இலகுவாக வெற்றிகொண்டது.
றினோன் ப்ளூஸ் சார்பாக எம். அக்ரம் அஹ்மத் 3 கோல்களையும் ரிஷி அனுஹாஸ் வெடிசிங்க, சியாம் மொஹமத் ஷபாக் ஆகியோர் தலா ஒரு கோலையும் போட்டனர்.
ஆட்டநாயகனாக அக்ரம் அஹ்மத் தெரிவானார்.
மற்றொரு போட்டியில் ஜாவா லேன் அணியை 3 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் கலம்போ கிக்கர்ஸ் அணி வெற்றிகொண்ட து.
கலம்போ கிக்கர்ஸ் சார்பாக ஆட்டநாயகன் தெவின் ஜீவந்தர 2 கோல்களையும் அப்தி அஷ்ரப் ஒரு கோலையும் ஜாவா லேன் சார்பாக மொஹமத் ஷபீக் ஒரு கோலையும் போட்டனர்.
றினோன் ப்ளூஸ், கலம்போ கிக்கர்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் இதுவரை தோல்வி அடையாமல் இருப்பதுடன் தத்தமது முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றிகளை ஈட்டியுள்ளன.
ஹென்றி பேத்ரிஸ் அணிக்கும் றினோன் வைட்ஸ் அணிக்கும் இடையில் நடைபெற்ற போட்டி கொல் எதுவும் போடப்படாமல் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.
இப் போட்டியில் ஹென்றி பேத்ரிஸ் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தின் எஸ். கே. ரிஷி ஆட்டநாயகனாகத் தெரிவானார்.
இரண்டாம் கட்டப் போட்டிகள் முடிவில் றினோன் எவ்.ஏ. ப்ளூஸ், கலம்போ கிக்கர்ஸ் ஏவ்.ஏ. ஆகிய இரண்டு அணிகளும் தலா 2 வெற்றிகளுடன் 6 புள்ளிகளைப் பெற்றுள்ளன. எனினும் 10 கொல்களைப் போட்டுள்ள றினோன் எவ்.ஏ. ப்ளூஸ் அணி நிகர கோல்கள் வித்தியாச அடிப்படையில் முன்னிலையில் இருக்கின்றது.
றினோன் எவ்.ஏ. வைட்ஸ் அணி ஒரு வெற்றி மற்றும் ஒரு வெற்றிதோல்வியற்ற முடிவுகளுடன் 4 புள்ளிக களைப் பெற்று மூன்றாவது இடத்திலும் ஹென்றி பேத்ரிஸ் எவ்.ஏ. ஒரு புள்ளியுடன் நான்காம் இடத்திலும் இருக்கின்றன.
குறே எவ். ஏ., ஜாவா லேன் ஆகிய அணிகள் இன்னும் ஒரு வெற்றியையும் பதிவு செய்யவில்லை.
கால்பந்தாட்டம் மூலம் ஒற்றுமை கனிஷ்ட கால்பந்தாட்ட லீக் சுற்றுப் போட்டியை இலங்கையின் முன்னணி கால்பந்தாட்டப் பயிற்சியகங்களில் ஒன்றான றினோன் கால்பந்தாட்டப் பயிற்சியகம் முன்னின்று நடத்துகிறது.
இந்தத் திட்டத்திற்கு தேசிய சங்கங்கள், கழகங்கள், அறக்கட்டளைகள் உட்பட பல சர்வதேச நிறுவனங்கள் ஆதரவு வழங்குகின்றன.
கால்பந்தாட்டம் மூலம் ஒற்றுமை கனிஷ்ட கால்பந்தாட்ட லீக்கின் மூன்றாவது கட்டம் கலம்போ கிக்கர்ஸ் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தின் ஏற்பாட்டில் அடுத்த வார இறுதியில் நடைபெறவுள்ளது.