மடகாஸ்கர் நாட்டில் கால்நடைகள் திருடப்படுவதை தடுக்கும் வகையில் ஜிபிஎஸ் உடன் கூடிய புதிய மின்னணு சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
செபு எனும் திமிலுடன் கூடிய நாட்டு மாடுகளுக்கு பெயர் போன மடகாஸ்கரில் கால்நடைகள் திருட்டு அதிகரித்து வந்த நிலையில், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய அதிபர் ஆண்டிரி ரஜோலினா தேர்தல் பரப்புரையின் போது வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில் தற்போது புதிய சாதனம் வடிவமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட உருளை வடிவ சாதனம், மாடுகளின் வாய்வழியாக வயிற்றுக்குள் செலுத்தப்படுகிறது. அதனோடு இணைக்கப்பட்ட டிடெக்டர் சிக்னல் மூலம், மாடு எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதையும், கணினி மென்பொருள் வழியாக எங்கெங்கு செல்கிறது என்பதையும் அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சாதனத்தால் மாட்டுக்கு எந்த தீங்கும் நேரிடாது எனவும், மாட்டின் சராசரி ஆயுட்காலமான 7 ஆண்டுகள் வரை வயிற்றினுள்ளிருந்து செயல்படும் இந்த சாதனம் மாடு உயிரிழந்த பின்னர் தானாகவே செயலிழக்கும் எனவும் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும் இந்த சாதனம் அந்நாட்டு விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.