காலி – கிந்தோட்டை பிரதேசத்தில் அண்மையில ஏற்பட்ட குழப்பநிலை தற்போது, முழுமையாக குறைவடைந்துள்ள போதிலும், அப் பகுதிக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை அவ்வாறே வைத்திருக்குமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணித்துள்ளதாக, சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று, ரணில் விக்ரமசிங்க, சாகல ரத்நாயக்க, வஜீர அபேவர்த்தன உள்ளிட்ட குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்திருந்தனர்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் விஷேட அறிக்கை ஒன்றை பெற்றுத் தருமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சரான சாகல ரத்நாயக்கவுக்கு கூறியுள்ளார்.
இதனையடுத்து, சாகல, முடிந்தளவு விரைவாக அந்த அறிக்கையை வழங்குமாறு, பொலிஸ் மா அதிபர் பூஜீத்த ஜெயசுந்தரவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அத்துடன், மறு அறிவிப்பு வரை அப் பகுதிக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை விலக்கிக் கொள்ளவோ தளர்த்தவோ வேண்டாம் எனவும், அமைச்சர் பொலிஸ் மா அதிபருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
மேலும், சமூக வலைத் தளங்களில் இந்த சம்பவம் தொடர்பான பொய்யான பிரச்சாரங்களை மேற்கொள்வதை நிறுத்துமாறும், அதுபோன்ற பொய்ப் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம் என்றும் அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.