அகிம்சாவாதி பூபதி அன்னையின் 34வது சிரார்த்த தினத்தில் சமாதியில் அஞ்சலி செலுத்தத் தடைகள் விதிக்கப்பட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
அதில் மேலும், காலிமுகத்திடலில் கோவிட்டிற்கு தடையில்லை, வடக்கு கிழக்கில் தான் தடைக்கு மேல் தடைகள், தவறான தகவல்களைக் கொடுத்துத் தடையுத்தரவுகள் எடுக்கின்றனர் பொலிஸார்.
நீதிமன்ற உத்தரவால் அதனை மதித்து நடந்தோம் என குறிப்பிட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிநேசன் மற்றும் அரியநேத்திரன் ஆகியோர் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
மட்டக்களப்பு – நாவலடியில் அமைந்துள்ள அன்னை பூபதியின் 34ஆவது நினைவேந்தலை அவரது சமாதியில் செய்வதற்கு அவரது மகள் மற்றும் உறவினர்களை இன்று பொலிஸார் நினைவேந்தலைச் செய்வதற்குச் செல்லவிடாது தடுத்து நிறுத்தியுள்ளதாக அன்னை பூபதியின் மூத்தமகள் லோகேஸ்வரன் சாந்தி கவலை தெரிவித்துள்ளார்.
சீலாமுனை பகுதியில் அமைந்துள்ள அன்னை பூபதியின் மகளின் வீட்டில் அவரது குடும்பத்தினர் அன்னை பூபதியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தினர்.இதனை தொடர்ந்து பூபதியின் மகள் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று எனது தாயாரான அன்னை பூபதியம்மாவின் 34ஆவது ஆண்டு நினைவு நாள் அதனைவிட்டு நாவலடியில் அமைந்துள்ள அவரது சமாதிக்கு அஞ்சலி செலுத்துவதற்கு எனது குடும்பத்தினர் சென்றோம். அப்போது அங்கு இருந்த பொலிஸார் எங்களை விசாரித்துவிட்டு நீதிமன்ற உத்தரவு என ஒரு பேப்ரை வாசித்துவிட்டு அவர் விடுலைப்புலிகளுக்காக உண்ணாவிரதம் இருந்துள்ளார்.எவரும் அஞ்சலி செலுத்த முடியாது என தெரிவித்து அங்கு அஞ்சலி செலுத்த விடாது தடுத்தனர். எமது தாயார் அப்போது அம்பாறை அன்னையர் முன்னணி சார்பில் அமைதியான முறையில் இந்திய இராணுவத்துக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார் எனவும் என பொலிஸாருக்கு எடுத்துரைத்தேன்.
இருந்தபோதும் எங்கள் மூன்று பேரையும் அஞ்சலி செலுத்த விடாது பொலிஸார் தடுத்ததையடுத்து அங்கிருந்து வெளியேறி வீட்டிற்கு வந்துள்ளோம்.
கடந்த 3 வருடங்களுக்கு முதல் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அப்போது எனது தாயாருக்குச் சென்று அஞ்சலி செலுத்தவேண்டும் அதற்கு தடை இல்லை எனவும் அவருடைய அஞ்சலியைத் தொடர்ந்து செய்துவரவேண்டும் அதற்கான உரிமை இருக்கின்றது என அவர் தெரிவித்தார். ஆனால் இப்போது பொலிஸார் தடுக்கின்றனர்.
எனவே என்தாயாருக்கு அஞ்சலி செலுத்தப் பிள்ளைகளுக்கு உரிமை இல்லையா? எனவே இதற்கு நடவடிக்கை எடுத்து தரவேண்டும். அதேவேளை அன்னை பூபதியை வைத்து அவரின் பிள்ளைகளுக்கு உதவுவதாக எனது உறவினர் உட்படச் சிலர் வெளிநாடுகளில் பணம் வசூலித்து மோசடி செய்கின்றனர். எங்களுக்கு எனது சகோதரங்களுக்கோ ஒரு உதவியும் தரப்படவில்லை.
அதேவேளை அரசியல் வாதிகள் உட்படப் பலர் வந்து அன்னை பூபதியின் சமாதியை அபிவிருத்தி செய்வோம். பூங்கா அமைப்போம் சிலைவைப்போம் எனத் தெரிவித்து வாக்குறுதி தந்துவிட்டுச் சென்றவர்கள் சென்றவர்கள் தான்.
எனவே இவ்வாறான நிலையில் இன்று நாங்கள் சென்று அஞ்சலி செலுத்துவதற்கு பொலிஸார் தடுத்து நிறுத்தியது மிகவும் மனவேதனையான விடையம் எனவே எதிர்வரும் காலத்தில் அவரது பிள்ளைகள், உறவினர்கள் அஞ்சலி செலுத்துவதற்காவது அனுமதியைப் பெற்றுத்தர அனைவரும் உதவ வேண்டும்” இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]