காய்க்கும் மரமே கல்லடி படும் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
உத்தேச 21 ஆவது திருத்தச் சட்டத்தின் இரட்டை பிரஜா உரிமை குறித்த விவகாரம் தொடர்பில், நேற்றைய தினம் ( 3) கம்பஹா நீதிமன்ற வழக்குத் தீர்ப்பின் பின்னர், நீதிமன்றுக்கு முன்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மல்வானை வீடு குறித்த வழக்கின் தீர்ப்பு நேற்று கம்பஹா மேல் நீதிமன்றால் வழங்கப்பட்டு, அவ்வழக்கில் பசில் ராஜபக்ஷ குற்றமற்றவர் என தீர்ப்பறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நீதிமன்றுக்கு வெளியே வந்த பசில் ராஜபக்ஷவிடம், ஊடகவியலாளர்கள் தீர்ப்பு குறித்து என்ன நினைக்கின்றீர்கள் என கேட்டனர்.
அதற்கு பதிலளித்த அவர், சிரித்தவாறே, நியாயம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, ஊடகவியலாளர்கள், கொண்டுவரப்படவுள்ள 21 ஆவது திருத்தச் சட்ட மூலம், உங்களை இலக்கு வைத்ததாக உள்ளதே. 21 ஆவது திருத்தச் சட்டம் குறித்து என்ன நினைக்கின்றீர்கள் என கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த பசில் ராஜபக்ஷ, காய்க்கும் மரம் தான் கல்லடி படும் என பதிலளித்தார்.
21 ஆவது திருத்தச் சட்டத்துக்கு, பொது ஜன பெரமுன ஆதரவளிக்குமா என இதனையடுத்து ஊடகவியலாளர்கள் கேட்ட போதும், அதற்கு பொது ஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களையே கேட்க வேண்டும் எனவும், பொருத்திருந்து பார்ப்போம் எனவும் பதிலளித்து பசில் ராஜபக்ஷ அங்கிருந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.