இந்திய வீரர் காம்பிர், 36. டில்லியை சேர்ந்த இவர், ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா அணி கேப்டனாக 7 ஆண்டுகள் இருந்தார். 2012, 2014ல் கோல்கட்டா அணிக்கு கோப்பை வென்று தந்தார். 11வது சீசனில் கோல்கட்டா அணி, காம்பிரை கழற்றி விட்டது.
சமீபத்தில் நடந்த ஏலத்தில் கூட, இவரை தக்கவைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தற்போது காம்பிர் (ரூ. 2.8 கோடி) டில்லி அணிக்கு சென்றுள்ளார். இதுகுறித்து கோல்கட்டா அணி ‘டுவிட்டர்’ இணையதளத்தில், தலைமை செயல் அதிகாரி வெங்கி மைசூர் வெ ளியிட்ட ‘வீடியோ’ செய்தி:
ஏலத்தின் போது, ‘ரைட் டு மேட்ச்’ அடிப்படையில் காம்பிரை தக்கவைத்துக் கொள்ள திட்டமிட்டு இருந்தோம். ஆனால், ஏலத்துக்கு முன்பாக அவர் எங்களிடம் பேசினார். தனக்கு முன் வேறு சில சவால்கள் இருப்பதாக நினைத்தார். இது என்ன என்பது எங்களுக்குத் தெரியாது.
ஏலத்தில் எந்த ஒரு வழியிலும், காம்பிரை எடுக்க வேண்டாம் என, நாங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டோம். அதேபோல, எந்த ஒரு வீரரின் விருப்பத்துக்கு எதிராகவும் செயல்படவும் விரும்பவில்லை. ஏழு ஆண்டுகள் எங்களுடன் இருந்த காம்பிர் சென்றது வருத்தமாகத் தான் உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.