இன்று காலை நடந்த காபூல் கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் இதுவரையில் 35 பேர் பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று காலை சக்திவாய்ந்த குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்தது. தற்கொலைப் படையினர் காரில் இருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் அதிகளவிலான பொதுமக்கள் பலியாகினர். இதுவரையில் 35 பேர் இந்த குண்டுவெடிப்புத் தாக்குதலில் பலியாகியுள்ளனர். 45-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில் பலியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
காபூலில் சில காலமாகவே தீவிரவாதத் தாக்குதல்களும், குண்டுவெடிப்புச் சம்பவங்களும் அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. இந்நிலையில், இன்று ஆப்கானிஸ்தானின் முக்கிய அதிகாரியான மொகமது மொஹாகிக் வீட்டுக்கு அருகில் இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுரங்க அமைச்சகப் பணியாளர்கள் பயணித்த பேருந்தின் மீது வெடிகுண்டுடன் வந்த கார் மோதி இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. சமீபகாலமாக நடந்து வரும் தீவிரவாத சம்பவங்களுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்று வந்தாலும், இன்று காலை நடந்த குண்டுவெடிப்புக்கு இதுவரையில் எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.