ஆப்கானிஸ்தானில் அரசியல் தலைவரின் நினைவு தினத்தையொட்டி நடந்த பொதுகூட்டத்தில் குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கூட்டம் ரத்து செய்ய்பபட்டது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஷிடே பகுதியில் தலிபான் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட அரசியல் தலைவரான அப்துல் அலி மசாரி என்பவரது 24வது ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு பொது கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் அப்துல்லா, முன்னாள் பிரதமர் ஹமீத் கர்சாய் உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு அருகே குண்டுவெடித்தது. இதனால் கூட்டத்தில் பங்கேற்க வந்த பொதுமக்கள் அச்சமடைந்தனர். அப்போது மேடையில் பேசிய கீழவை சபாநாயகர் முகமது யூசூப், ‘‘அமைதியாக இருங்கள். நாம் இருக்கும் இடத்தில் இருந்து வெகு தொலைவில்தான் குண்டு வெடித்துள்ளது” என்றார். ஆனால் அதே நேரம் பொதுமக்கள் கூட்டத்தில் மற்றொரு குண்டு வெடித்து சிதறியது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து அங்கிருந்து வெளியேறினார்கள். அங்கு பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. இதையடுத்து கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.