நியூசிலாந்தில் பல்பொருள் அங்காடி ஒன்றில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இலங்கையர் அந் நாட்டு பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில் , அந்த நபர் தொடர்பில் இலங்கையிலும் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நியூசிலாந்தின் ஆக்லண்ட் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் நுழைந்த குறித்த இலங்கையர் கத்திக்குத்து தாக்குதலை ஆரம்பித்த 60 செக்கன்களில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார்.
வெறுக்கத்தக்க, தவறான இந்த செயலை செய்த நபர் மாத்திரமே இந்த தாக்குதலுக்கு பொறுப்பாளியாவார் என ஜெசிந்தா ஆர்டன் சம்பவத்தின் பின்னர் ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.
குறித்த நபர் இலங்கையை சேர்ந்த அடிப்படைவாத செயற்பாடுகளில் ஈடுபடும் ஒருவர் என நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந் நிலையில் குறித்த நபர் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு ஆகியவற்றுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் விஷேடவிசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் தேசிய உளவுச் சேவையும் பிரத்தியேக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
அதன்படி குறித்த இலங்கையர் மொஹம்மட் சம்சுதீன் மொஹம்மட் ஆதில் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஆரம்பகட்டமாக உள்ளக பொலிஸ் விசாரணைகளில் அவரது உறவினர்கள் சிலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வாக்கு மூலம் பெறப்பட்டதாக அறிய முடிகின்றது.
இதற்காக காத்தான்குடி பகுதிக்கு நேற்று இரவு பொலிஸ் குழுவொன்று சென்றிருந்தது. அத்துடன் குறித்த நபர் தலைநகரில் கல்வி கற்ற பின்னர், வெளிநாட்டுக்கு சென்றுள்ளமை தொடர்பிலும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் , கடந்த 10 வருடங்களாக குறித்த இலங்கையர் நியூசிலாந்தில் வசித்து வந்துள்ளார். 5 வருடங்களாக அந்நபரை நியூசிலாந்தின் பாதுகாப்பு தரப்பினர் கண்காணித்து வந்துள்ளனர்.
ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாத குழுவினரை பின்தொடர்ந்துள்ள இந்த இலங்கையர் கடந்த 2011 ஆம் ஆண்டில் நியூசிலாந்து சென்றுள்ளதாக இலங்கையின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உறுதி செய்தது.
அவர் தொடர்பில் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விடயங்களை தற்போதைக்கு வெளிப்படுத்த முடியாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் இவர் தொடர்பாக குற்ற புலனாய்வு பிரிவினர் மற்றும் அரச புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரனையில் இவர் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டார்.
காத்தான்குடி கபூர் கடை வீதியைச் சேர்ந்த அதிபரான சம்சூதீன் முகமது இஸ்மாயில் சரிதா தம்பதிகளுக்கு 1989 ஆம் ஆண்டு கடைசி மகனான பிறந்த முகமது சம்சூதீன் ஆதில் உடன் ஒரு சகோதரியும் 2 சகோதாரன் உட்பட 4 பேரை கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த ஆதில் ஆரம்ப கல்வியை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் பயின்று வந்துள்ள நிலையில் நாட்டில் ஏற்பட்ட யுத்த காரணமாக குடும்பத்துடன் 1998 ஆம் ஆண்டு ஆதிலுக்கு 8 வயதில் இருக்கும் போது இடம்பெயர்ந்து கொழும்பு மொரட்டுவையில் தங்கியிருந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் க.பொ. உயர்தரம் கல்வி கற்று 2006 ஆம் ஆண்டு பரிட்சை எழுதிய பின்னர் 2011 ம் ஆண்டு நியூசிலாந்திற்கு சென்று குடியேறியுள்ளான்.
இவரின் தந்தையார் மாளிகாவத்தை அல் ஹிதாய பாடசாலையில் 2008 ஓய்வு பெறும் வரை அந்த பாடசாலை அதிபராக கடமையற்றி வந்து நிலையில் அவரது மகள் கனடாவில் குடியேறி வாழ்ந்துவருதுடன் அவருடன் கனடாவிற்கு சென்று குடியேறி வாழந்துவருகின்றார்.
அதேவேளை ஒரு சகோதாரன் கட்டாரில் திருமணம் முடித்து வாழ்ந்துவருதாகவும் அடுத்த சகோதரன் சவூதியில் இருப்பதாகவும் கொலன்னாவையில் உள்ள ஆதில் தாயாரான சொந்த வீட்டை வாடகைக்கு தாயார் கொடுத்துவிட்டு தமது காத்தான்குடி கபூர் கடை வீதியிலுள்ள வீட்டில் தாயார் வசித்துவருகின்றார்
இந்த நிலையில் குடும்பத்தில் கடைசிப் பிள்ளையான முகமது சம்சூதீன் ஆதில் நியூசிலாந்தில் குடியேறிய பின்னர் அவர் அங்கு பல்வேறு குற்றச் செயல்காரணமாக பொலிசாரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி வந்துள்ளதை நியூசிலாந்து பொலிசார் கண்டுபிடித்து அவரை பின் தொடர்ந்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இது தொடர்பா அரச புலனாய்வு பிரிவினர் மற்றும் காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றதாக அவர் தெரிவித்தார்.