காதல் விவகாரத்தில் நண்பனின் தலையைத் துண்டித்து கொலை செய்துள்ளதுடன், அவரது உடலிலிருந்து இதயத்தை வெளியே எடுத்த இந்திய இளைஞன் பொலிஸில் சரணடைந்துள்ளார்.
கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற இக்கொலையுடன் தொடர்புடைய இளைஞன், நேற்றைய தினம் (25.02.2023) பொலிஸில் சரணடைந்ததையடுத்து, அவரை இந்தியாவின் தெலுங்கானா மாநில பொலிஸார் சிறையில் அடைத்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கல்வி பயின்றுவந்த மாணவர் நவீன் (வயது 22). இவரும் அதே கல்லூரில் அதே வகுப்பில் பயின்றுவந்த ஹரி ஹர கிருஷ்ணா (வயது 21) என்ற மாணவனும் நண்பர்கள். இதனிடையே, அதே கல்லூரியில் பயின்றுவரும் மாணவியை நவீன் அவரது நண்பன் கிருஷ்ணா என இருவருக்கும் காதலித்து வந்துள்ளனர். முதலில் நவீன் தனது காதலை அந்த மாணவியிடம் கூறியுள்ளார்.

குறுஞ்செய்தி அனுப்பி தொல்லை
அந்த மாணவியும் நவீனின் காதலை ஏற்றுக்கொண்டுள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுக்கு முன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக நவீனும் அவரது காதலியான மாணவியும் பிரிந்துள்ளனர். இதன் பின்னர் ஹரிஹர கிருஷ்ணா அந்த மாணவியுடம் காதலை வெளிப்படுத்தியுள்ளார். நவீனின் காதலை விட்டுப் பிரிந்து பல மாதங்கள் ஆனதையடுத்து, ஹரிஹர கிருஷ்ணனின் காதலுக்கு அந்த மாணவி சம்மதம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பிரிந்து சென்ற தனது முன்னாள் காதலியான மாணவிக்கு நவீன் தொடர்ந்து தொலைபேசி அழைப்பு விடுத்து, குறுஞ்செய்தி அனுப்பியும் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி தனது காதலனான ஹரிஹர கிருஷ்ணனிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஹரிஹர கிருஷ்ணன், தனது காதலிக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்துவந்த தனது நண்பன் நவீனை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். இதற்காகக் கடந்த 3 மாதங்கள் திட்டமிட்டுள்ளார்.

கொலை
இந்நிலையில், கடந்த 17ஆம் திகதி இரவு தனது நண்பன் நவீனை தில்ஷுக்நகரில் உள்ள தனது வீட்டிற்கு ஹரிஹர கிருஷ்ணன் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், இரவுக் கல்லூரி விடுதியில் விட்டுவிடுவதாக ஹரிஹர கிருஷ்ணன் தனது மோட்டார் சைக்கிளில் நவீனை அழைத்துச் சென்றுள்ளார்.
செல்லும் வழியில் ஆள் நடமாட்டமற்ற பகுதிக்கு நவீனை அழைத்துச் சென்று, அங்கு நவீனும் ஹரிஹர கிருஷ்ணனும் மது அருந்தியுள்ளனர். மது போதையில் காதலி விவகாரத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் ஹரிஹர கிருஷ்ணன் தான் மறைத்துவைத்திருந்த கத்தியைக் கொண்டு நவீனை கொடூரமாகத் தாக்கி கொலை செய்துள்ளார்.
நவீனின் தலையைத் துண்டித்து, உடலை இரண்டாக வெட்டி இதயத்தை வெளியே எடுத்துள்ளார். மேலும், நவீனின் விரல்களையும் துண்டித்துள்ளார். ஆயினும் ஆத்திரமடங்காத ஹரிஹர கிருஷ்ணன் தனது நண்பன் நவீனின் பிறப்புறுப்பையும் துண்டித்துள்ளார்.

பொலிஸில் சரண்
நவீனை கொடூரமாகக் கொலை செய்த ஹரிஹர கிருஷ்ணன் அந்தக் கொடூரத்தை புகைப்படம் எடுத்துத் தனது காதலிக்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்தக் கொலை நடந்து 9 நாட்களான நிலையில், ஹரிஹர கிருஷ்ணன் நேற்று பொலிஸில் சரணடைந்துள்ளார். இதையடுத்து, ஹரிஹர கிருஷ்ணனை கைது செய்த பொலிஸார் அவரைச் சிறையில் அடைத்துள்ளனர்.
பின்னர், கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நவீனின் உடலை மீட்டப் பொலிஸார் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
காதலிக்குத் தொலைபேசி அழைப்பு விடுத்து தொல்லை கொடுத்ததால் நண்பனைக் கொடூரமாகக் கொலை செய்து இதயத்தை வெளியே எடுத்த சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.