காதலர்களான ஆண்கள், காதலிகளான பெண்கள், அவர்கள் வாழும் இந்த சமூகம் போன்ற அனைத்திலுமே சிந்தனை மாற்றங்கள் உருவாகவேண்டும்.
காதல் மனித வாழ்க்கையை துளிர்க்கவும் வைக்கிறது. துடிக்கவும் வைக்கிறது. எத்தனையோ காதலர்கள் ஒன்றிணைந்து வெற்றிகரமாக தங்கள் வாழ்க்கையை தொடங்கினாலும், தோல்வியடையும் ஒரு சில காதலர்களின் வாழ்க்கையில் சோகம் சூழ்ந்துவிடுகிறது. காதலில் பிரிவு ஏற்படும்போது வன்முறையைத் தேடும் ஆண்களில் சிலர் காதலியை பழிவாங்க ஆசிட் வீசுவது, தீவைத்து கொழுத்துவது, குடும்பத்தினரை கொலை செய்வது போன்ற கோர செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
கட்டுக்கடங்காத காதல் தீயால் ஏற்படும் கோர சம்பவங்களையும், இழப்புகளையும் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றால் காதலர்களான ஆண்கள், காதலிகளான பெண்கள், அவர்கள் வாழும் இந்த சமூகம் போன்ற அனைத்திலுமே சிந்தனை மாற்றங்கள் உருவாகவேண்டும். அதை பற்றி விரிவாக அலசுவோம்!
காதல் ஒரு மோசமான செயல். அதற்கெல்லாம் உன்னை அனுமதிக்க முடியாது’ என்று சில பெற்றோர்கள், மகளிடம் சொல்கிறார்கள். அப்படி சொல்லவேண்டியதில்லை. காதல் என்பது மனித உணர்வு. அது இயல்பானது. பயங்கொள்ளக்கூடியதல்ல. கட்டுப்படுத்த வேண்டியதும் இல்லை. மகளுடன் சுதந்திரமாக எல்லா விஷயங்களையும் விவாதித்தால்தான் அவளும் தனது மனதில் இருப்பதையும், தன்னைச் சுற்றி நடப்பதையும் விவாதிக்க முன்வருவாள். காதலுக்கு கட்டுப்பாடு விதிக்கும் பெற்றோரின் மகள்கள் பெற்றோருக்கு தெரியாமலே காதலிக்கிறார்கள். அது தப்பான காதலர்களுக்கு ஊக்கமாகிவிடுவதால், அத்தகைய பெண்கள் அதிகமாக பாதிக்கப்படவும் செய்கிறார்கள். மகள் பாதிக்கப்பட்ட பின்பே இத்தகைய பெற்றோருக்கு மகளின் காதலே தெரியவருகிறது.
`என் மகளுக்கு எதுவுமே தெரியாது. அவள் ஒரு அப்பாவி’ என்று சில பெற்றோர் தவறாக தப்பட்டம் அடித்துக்கொள்கிறார்கள். காதல் தப்பானதல்ல. காதலிக்கும் பெண்களும் தப்பானவர்கள் இல்லை. காதலை சரியாக கையாளத்தெரியாத பெண்களே அதன் ஆபத்துகளில் சிக்குகிறார்கள். காதலை போன்று பெண்களின் வாழ்க்கையில் பல பிரச்சினைகள் வரும். அதை எல்லாம் கையாள பெண்களுக்கு போதுமான அனுபவம் தேவை. அதனால் பிரச்சினைகளே இல்லாத பெண்களாக யாருமே வாழ முடியாது என்பதை உங்கள் மகளுக்கு உணர்த்தி, பிரச்சினைகளை சரியாக கையாள வழிகாட்டுங்கள்.