காணி உரித்து இல்லாதவர்களுக்கு உரித்துரிமை வழங்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையை எதிர்க்கட்சி நீதிமன்றம் சென்று தடுத்துள்ளது. அதனால் அரச காணி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை அர சாங்கம் வாபஸ் பெற்றுக்கொள்கின்றது.
இதன் மூலம் 25 லட்சம் பேருக்கு காணி உரித்துரிமை வழங்கும் திட்டம் தடைப்பட்டுள்ளது என சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல சபையில் தெரிவித்தபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்தனர்.
பாராளுமன்றம் நேற்று பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்ற பின்னர், சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல விசேட கூற்றொன்றை முன்வைத்து தெரிவிக்கையில்,
அரசகாணி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை அரசாங்கம் வாபஸ்பெற்றுக்கொள்கின்றது. எதிர்க்கட்சியினர் நீதிமன்றம் சென்று அதனை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதால் அதில் சட்டப்பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன. காணி உரித்து இல்லாத 25 இலட்சம்பேருக்கு காணி உரித்துரிமை வழங்குவதற்கே நாங்கள் நடவடிக்கை எடுத்திருந்தோம்.
நாட்டில் பலருக்கு காணி உரித்துரிமை இல்லாததால் அவர்களுக்கு வங்கி கடன் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. அதனால் தான் நாங்கள் அரசகாணி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து காணி உரித்துரிமை இல்லாதவர்களுக்கு உரித்துரிமை வழங்க நடவடிகை எடுத்தோம். அதன் மூலம் அவர்களுக்கு அந்த காணியை விற்கமுடியும். விரிவாக்க முடியும். என்றாலும் எதிர்க்கட்சி நீதிமன்றம் சென்று அதனை தடுத்திருக்கின்றது என்றார்.
இதன்போது எதிர்க்கட்சி உறுப்பினர் பந்துல குணவர்த்தன ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை முன்வைத்து தெரிவிக்கையில், சபை முதல் தெரிவித்ததற்கமைய நாங்கள் நீதிமன்றம் சென்று இதனை தடுக்கவில்லை. மாறாக அரசாங்கம் இந்த சட்ட மூலத்தின் ஊடாக எமது காணிகளை சர்வதேச மயமாக்கும் திட்டத்திலே இவ்வாறு நடவடிக்கை எடுத்திருக்கின்றது. அதனால்தான் நீதிமன்றம் சென்று தடையை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தோம் என்றார்.
அதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர் சிசிர ஜயகொடி தெரிவிக்கையில்,
இந்த சட்டமூலத்தை தடுத்து நிறுத்த நானும் நீதிமன்றம் சென்றேன். சபை முதல்வர் தெரிவிப்பதுபோல் எந்த நோக்கமும் எமக்கில்லை. மாறாக அரசாங்கம் இந்த சட்டமூலத்தை சரியான முறையில் தயாரிக்காமலே சமர்ப்பித்திருக்கின்றது. அதனால்தான் நீதிமன்றம் அந்த சட்டமூலம் சட்டவிராேதம் என தீர்ப்பளித்திருக்கின்றது. இதன் மூலம் எமது விவசாய பூமிகள் வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்வதை தடுத்திருக்கின்றோம் என்றார்.
அதனைத்தொடர்ந்து விமல் வீரவன்ச தெரிவிக்கையில், நாட்டு மக்களுக்கு காணி உரித்துரிமை வழங்குவதற்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை. ஆனால் அதில் ஒரு நிபந்தனை இருக்கின்றது. அதாவது வெளிநாட்டவர்களுக்கு காணிகளை விற்கமுடியும் என்ற நிபந்தனையை தெரிவித்தே நீங்கள் காணி உரித்துரிமை வழங்க நடவடிக்கை எடுத்திருக்கின்றீர்கள். அதனால் வெளிநாட்டவர்கள் இந்த நாட்டில் காணிகளை பெற்றுக்கொள்ள முடியாதவகையில் சட்டத்தை திருத்தியமைத்து முடியுமானால் இந்த சட்ட மூலத்தை சமர்ப்பியுங்கள். அவ்வாறான காணி உரித்தை வழங்குவதற்கு நாங்கள் நூறுவீதம் ஆதரவளிப்போம் என்றார்.