காணிவிடுவிப்பு தொடர்பில் விரைவில் நல்லதொரு செய்தி கிடைக்கும் என இராணுவத் தளபதி லெப்டினல் கேணல் மகேஸ் சேனநாயக்க தன்னிடம் உறுதியளித்ததாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம் நண்பகல் வடமாகாண முதலமைச்சரை அவரது வாசஸ்தலத்தில் புதிய இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இக் கலந்துரையாடல் தொடர்பாக முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டார்.
கலந்துரையாடல் தொடர்பாக முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
சந்திப்பில் இராணுவத் தளபதி ஓர் விடயத்தை குறிப்பிட்டிருந்தார். அதாவது மயிலிட்டி துறைமுகத்தை விரைவில் திருப்பி பெற்றுத்தருவதாக கூறியிருந்ததின் படி அதனை மீள பெற்றுத்தந்துவிட்டதாக கூறினார்.
இதன்போது நான் அவரிடம் சில விடயங்களை எடுத்துக்கூறினேன். தோலகட்டி பகுதியில் பண்ணை பகுதிகள் இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ளன. அதற்கான வீதியானது 2 கிலோ மீற்றர் தூரம் உள்ள நிலையில் அதனை விடுவிக்காது இருப்பதால் அதற்கு பதிலாக 5 கிலோ மீற்றர் தூரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளதாக பாதிரியார்கள் என்னிடம் கூறிய விடயத்தை இராணுவ தளபதியிடம் நான் கூறியிருந்தேன். இது தொடர்பாக அவர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
மேலும் தற்போது யுத்த காலத்தில் இருப்பது போன்றல்லாது யுத்தம் முடிவடைந்த பின்னரான காலத்தில் இராணுவம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய விதத்தில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பாக தாம் இராணுவத்தினருக்கு கூறிவருவதாக என்னிடம் இராணுவ தளபதி கூறினார்.
இதனைவிட காணிவிடுவிப்பு தொடர்பாக நல்லதொரு செய்தி கிடைக்குமென அவர் கூறியதுடன் கேப்பாப்புலவு காணி விடுவிப்பு தொடர்பாக சுவாமிநாதன் ஒரு தொகை பணத்தை தருவதாக கூறியுள்ள நிலை யில் படையினர் அப் பகுதியை விடுவித்து விடுவார் கள் என தான் நம்புவதாகவும் இராணுவத் தளபதி என்னிடம் சுட்டிக்காட்டினார் என்றார்.