இரகசிய விசாரணை முகாம்கள் இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு படையினர் தொடர்ந்தும் மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கில ஊடகம் ஒன்றை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தம் மற்றும் அதற்கு பிற்பட்ட காலப்பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 50க்கும் மேற்பட்ட படைத்தரப்பினர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையிலேயே, இரகசிய விசாரணை முகாம்கள் இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பி.தஸநாயக்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே, இந்த தகவல் வெளியாகியுள்ளது.
எவ்வாறாயினும், 2008 மற்றும் 2009ம் ஆண்டு காலப்பகுதியில் 11 தமிழ் இளைஞர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் கடற்படையைச் சேர்ந்த மேலும் பலர் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவிடம் ஆட்கடத்தல் சம்பந்தமாக குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது, அவர் வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைய கடற்படை அதிகாரிகள் பலர் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் பணத்திற்காகவே கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர அண்மையில் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தும் இலங்கையில் தொடர்ந்தும் தடுப்பில் உள்ளவர்கள் மீது சித்திரவதையும் பாலியல் வன்முறையும் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மைகள் மற்றும் நீதிக்கான திட்டம் அண்மையில் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இறுதி யுத்த காலத்தின் போதும் அதற்கு பிற்பட்ட காலப் பகுதியிலும் இராணுவத்தினரிடம் நேரடியாகக் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டுபிடித்து தருமாறு வலிறுயுத்தி தமிழர் தாயகப் பிரதேசங்களில் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை போன்ற மாவட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டங்களை கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை அண்மையில் சந்தித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார்.
இந்த நிலையிலேயே 50 படையினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.