காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், தேசிய நல்லிணக்கம் மற்றும் மறுசீரமைப்புக்கான அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ள நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, இவ்வனைத்துக்கட்டமைப்புக்களும் பொதுமக்களுக்கு நன்மையளிக்கக்கூடியவகையில் இயங்கவேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய நல்லிணக்கம் மற்றும் மறுசீரமைப்புக்கான அலுவலகம், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகம் ஆகிய கட்டமைப்புக்களின் செயற்பாடுகள், அக்கட்டமைப்புக்களால் எதிர்வருங்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் நோக்கிலான சந்திப்பொன்று நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவிற்கும் தேசிய நல்லிணக்கம், மறுசீரமைப்புக்கான அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி குஷான் த அல்விஸ், காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த, இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் அதிகாரிகள் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பொன்று வெள்ளிக்கிழமை (10 ) கொழும்பிலுள்ள நீதியமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின்போது மேற்குறிப்பிட்ட 3 கட்டமைப்புக்களும் எதிர்வருங்காலங்களில் முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்திருக்கும் மக்கள் நலனை முன்னிறுத்திய நடவடிக்கைகள் தொடர்பில் அக்கட்டமைப்புக்களின் தலைவர்கள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவிற்கு விளக்கமளித்தனர்.
குறிப்பாக தற்போது நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், அதற்கு மத்தியில் தமது அலுவலகத்தின் செயற்பாடுகளை எவ்வாறு இடையூறின்றி முன்னெடுத்துச்செல்வது என்பது குறித்து நீதியமைச்சருடன் கலந்துரையாடியதாகக் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த கேசரியிடம் தெரிவித்தார்.
அத்தோடு அலுவலகத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்துச்செல்வதற்கும், காணாமல்போனோரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டை வழங்குவதற்கும் அவசியமான நிதியுதவிகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
‘சிவில் சமூக அமைப்புக்களுடனும், ஏனைய நாடுகளின் தூதரகங்களுடனும் இணைந்து பணியாற்றிவருவது குறித்தும், அதற்கான முயற்சிகள் குறித்தும் அமைச்சரிடம் எடுத்துரைத்தோம்.
அதற்கு அவர் தனது வரவேற்பை வெளிப்படுத்தினார். அதுமாத்திரமன்றி எமது அலுவலகத்தின் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத்தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்’ என்றும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த தெரிவித்தார்.
மேலும் காணாமல்போனோரின் விபரங்களை உள்ளடக்கிய தரவுத்தொகுதியொன்றைத் தயாரிப்பது குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்த தேசிய நல்லிணக்கம் மற்றும் மறுசீரமைப்புக்கான அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி குஷான் த அல்விஸ் தமது அலுவலகத்தின் செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்ததுடன், அவர்கள் புதிதாக சட்டமொன்றைக் கொண்டுவரவிருக்கும் நிலையில் அதற்குரிய நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவேண்டியதன் அவசியம் தொடர்பில் எடுத்துரைத்தார்.
நிறைவில் இவ்வனைத்துக் கட்டமைப்புக்களும் பொதுமக்களுக்கு நன்மையளிக்கக்கூடியவகையில் இயங்கவேண்டியதன் அவசியம் குறித்து நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.