பிரபுதேவா ஸ்டூடியோஸ் பட நிறுவனம் வித்தியாசமான கதைக்களம், திறமையான கலைஞர்கள், முன்னணி நடிகர்-நடிகைகளை வைத்து பிரமாண்டமான படங்களை தயாரித்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் உருவாகும் புதிய படம், ‘போகன்.’
‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் இடம் பெற்ற ஜெயம் ரவி, ஹன்சிகா, வி.டி.வி.கணேஷ், டைரக்டர் லட்சுமன், டி.இமான் கூட்டணியில் இந்த படம் உருவாகிறது. இதில் ஜெயம் ரவி கதாநாயகனாகவும், எதிர்மறை நாயகனாகவும் நடிக்கிறார். இதேபோல் அரவிந்த்சாமியும் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடிக்கிறார். இரு வேறு குணாதிசயங்களை கொன்ட வேடங்களில் இரண்டு பேரும் நடிக்கிறார்கள்.
கதாநாயகியாக ஹன்சிகா நடிக்கிறார். மற்றும் வி.டி.வி.கணேஷ், ஆடுகளம் நரேன், அஸ்வின், நாகேந்திரபிரசாத் ஆகியோரும் நடிக்கிறார்கள். சவுந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசையமைக்கிறார். தாமரை, மதன் கார்க்கி, ரோகேஷ் ஆகிய மூவரும் பாடல்களை எழுதுகிறார்கள். லட்சுமண் டைரக்டு செய்ய, டாக்டர் கே.கணேஷ் தயாரிக்கிறார்.
இதுபற்றி டைரக்டர் லட்சுமண் கூறும்போது, ”ரோமியோ ஜூலியட் ஜாலியான காதல் கதையாக இருந்தது. அதில் இருந்து முற்றிலும் மாறுபட்ட பரபரப்பான திருப்பங்களுடன், திகில் கலந்த உணர்வை ஏற்படுத்தும். படம் முழுக்க மெலிதான நகைச்சுவை இருக்கும். காக்கி சட்டைக்கு கவுரவம் சேர்க்கும் படமாக இது இருக்கும். படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெறுகிறது” என்றார்.