இந்த ஆண்டிற்கான மலையாள இலக்கிய உலகின் புகழ்பெற்ற ‘ஓ என் வி குறூப் நினைவு இலக்கிய விருதிற்கு கவிப்பேரரசு வைரமுத்து தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.
மலையாள இலக்கிய உலகில் பெரும் கவிஞர்களுள் ஒருவர் ஓ என் வி குறூப். இவர் இருபதுக்கும் மேற்பட்ட கவிதை தொகுப்புகளை எழுதியிருக்கிறார். ஆறுக்கும் மேற்பட்ட உரைநடையிலான இலக்கிய படைப்பை வழங்கியிருக்கிறார். அத்துடன் திரைப்பட பாடலாசிரியராகவும் பணியாற்றி, சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதையும் பெற்றிருக்கிறார்.
இந்திய அரசின் உயர்ந்த விருதுகளான ‘பத்மஸ்ரீ’, ‘பத்ம விபூஷன்’ போன்ற பட்டங்களையும் வென்ற இவர், இலக்கிய உலகின் உயர்ந்த விருதாக போற்றப்படும் ‘ஞான பீட ‘விருதையும் பெற்றிருக்கிறார். 2016ஆம் ஆண்டு மறைந்த இவரது நினைவாக 2017 ஆம் ஆண்டு முதல் ‘ஓ என் பி இலக்கிய விருது’ என்ற பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விருதுக்குரிய சான்றிதழுடன் மூன்று லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் கொண்டது. கவிஞர் சுகதாகுமாரி, எழுத்தாளர் எம் டி வாசுதேவன் நாயர், அக்கிதாம் என போற்றப்படும் கவிஞர் அகித்தாம் அச்சுதன் நம்பூதிரி, எழுத்தாளர், கல்வியாளர், திறனாய்வாளாரான எம். லீலாவதி போன்ற மலையாள இலக்கியவாதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இந்த விருது, முதன் முறையாக மலையாளி அல்லாத தமிழரான வைரமுத்துவிற்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக வைரமுத்து தெரிவித்திருப்பதாவது,
‘ஓ. என். வி. குரூப் இலக்கிய விருது பெறுவதை பெரும் பெருமையாக கருதுகிறேன். நான் பெரிதும் மதிக்கும் இலக்கிய பூமியான கேரளத்திலிருந்து இந்த விருது வந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. தமிழுக்கு சகோதர மொழி சூட்டிய மகுடமாக நான் இதை கருதுகிறேன். மலையாளத்தின் காற்றும் தண்ணீரும் கூட இலக்கியம் பேசும். அந்த மண்ணிலிருந்து பெரும் விருதை மகுடமாக கருதுகிறேன். வெவ்வேறு மொழிகளில் எழுதப்பட்டாலும், இந்திய இலக்கியம் ஒன்றுதான். இந்த உயரிய விருதினை உலக தமிழர்களோடும், சக படைப்பாளிகளோடும் பகிர்ந்து கொள்கிறேன்’ என தெரிவித்திருக்கிறார்.
வைரமுத்து ஓ என் வி விருதை பெற்றதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
தமிழ் நாட்டின் பெருமைக்குரிய இலக்கியவாதியான கவிபேரரசு வைரமுத்துவின் புகழ் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் மின்னுவது போல், கேரளத்தின் புகழ்மிகு ஓ என் வி விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்விருது வைரமுத்துவின் தமிழாற்றல் எல்லைகளை விரிவுபடுத்தி உலகளாவிய விருதுகளை நோக்கிய அவரது பயணத்திற்கான பாதையை வகுத்திருப்பதாக ‘அவர் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.