கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆடித்திருவிழா முக்கியமானது. இந்த கோவிலில் ஆடித்தேரோட்டம் ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மதுரை அருகே உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆடித்திருவிழா முக்கியமானது. இந்தநிலையில் கொரோனா பரவல் காரணமாக திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவில் உள் பிரகாரத்தில் பக்தர்கள் அனுமதியின்றி நடைபெற்று வருகிறது. முன்னதாக ஆடி திருவிழாவின் கொடியேற்ற நிகழ்ச்சி கடந்த 16-ந் தேதி தொடங்கியது. இதனை தொடர்ந்து கோவில் உள் பிரகாரத்தில் ஒவ்வொரு நாளும் அன்னம், சிம்மம், அனுமார் உள்ளிட்ட ஒவ்வொரு வாகனத்திலும் கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளினார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று சனிக்கிழமை நடைபெற வேண்டிய தேரோட்டம் கொரோனா ஊரடங்கு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் பக்தர்கள் ஆடித்திருவிழாவையொட்டி கோட்டைவாசல் முன்பாக உள்ள மதுரை, மேலூர் சாலைகளின் இருபுறமும் கிடாய் வெட்டியும், பொங்கல் வைத்தும் நேர்த்திக்கடன்களை செலுத்தினர். மேலும் நீண்ட வரிசையில் காத்திருந்து கள்ளழகர் கோவிலிலும், பதினெட்டாம்படி கருப்பண சுவாமி கோவிலிலும் நெய் விளக்கேற்றி தரிசனம் செய்தனர். இதைப்போலவே சோலைமலை முருகன் கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதைதொடர்ந்து வழக்கம்போல் கோவில் உள் பிரகாரத்தில் பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடந்தது. இதில் கள்ளழகர் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளினார்.
தேரோட்டம் நேற்று ரத்து செய்யப்பட்ட காரணத்தால் கோவில் உள்பிரகாரத்தில் பரிகார பூஜைகளும் நடந்தது. இன்று(ஞாயிற்றுக்கிழமை) வழக்கம் போல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் அனிதா ஆகியோர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை சத்திரப்பட்டி, அப்பன் திருப்பதி போலீசார் செய்திருந்தனர்.
மேலும் நேற்று மாலையில் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவிலில் மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் பூ மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு கோவில் நிர்வாகம் சார்பில் திருக்கதவுகளுக்கு சந்தனம் சாத்துபடி நடந்தது. இதில் பட்டர்களும், கோவில் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.