கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் தரிசனத்திற்கு தடை செய்யப்பட்டது. இதையொட்டி நேற்று அலங்கார நுழைவு வாசலில் நின்று பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி தேவி கோட்டத்தில் பவானி ஆற்றின் கரையோர பகுதியில் பழமை வாய்ந்த வனபத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. கொரோனா தொற்று பரவுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனையொட்டி வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடி அமாவாசையன்று பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.
நேற்று ஆடி அமாவாசையொட்டி வழக்கம்போல் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. ஆனால் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.
கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் பக்தர்கள் அம்மனை வெளியே நின்று தரிசனம் செய்தனர். மேலும் சிலர் அலங்கார வளைவு நுழைவு வாசலில் பூட்டப்பட்டிருந்த கேட்டின் இரும்பு கம்பிகளின் மீது மாலைகளை அணிவித்து வாசல் முன்பு தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் அம்மனை வழிபட்டுச் சென்றனர்.
சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால் கோவில் வளாகம் மற்றும் ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள படித்துறையில் பக்தர்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கோவில் அலங்கார வளைவிலிருந்து நெல்லித்துறை பாலம் வரை காவல்துறையினரும் ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேட்டுப்பாளையம் கெண்டையூர் ரோடு காமராஜ் நகரில் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் உடனமர் அஷ்டதாரா லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. ஆடி அமாவாசையை யொட்டி கோவில் நடை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து லிங்கேஸ்வரர் மற்றும் தேவி ஸ்ரீ கருமாரி அம்மனுக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது. மேலும் காலை 7 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. தேவி ஸ்ரீ கருமாரியம்மன் தங்க கவசம் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காரமடையில் புகழ்பெற்ற அரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி கடந்த 2-ந்தேதி ஆடி கிருத்திகை நாளன்று கோவிலில் சாமி தரிசனத்திற்கு தடைவிதிக்கப்பட்டது. இதனால் காரமடை அரங்கநாத சுவாமி கோவில் பக்தர்கள் வாசலில் நின்று சாமி கும்பிட்டு சென்றனர்.
இந்த நிலையில் நேற்று அரங்கநாத சுவாமி கோவிலில் கேட் அடைக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவில் நுழைவு பகுதியில் நின்று கற்பூரம் ஏற்றி சாமியை வழிபட்டு சென்றனர்.
_____________________________________________________________________________
உடனுக்குடன், உவப்பான செய்திகளுக்கு: http://Facebook page / easy 24 news