ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணிக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையிலான முதலாவது இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை பலம் வாய்ந்த நிலையில் இருக்கிறது.
இந்த நான்கு நாள் டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை இளையோர் அணி, தினுர களுபஹனவின் அபார சதத்தின் உதவியுடன் 8 விக்கெட்களை இழந்து 432 ஓட்டங்களைப் பெற்று முதல் இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் மேற்கிந்தியத் தீவுகள் 2ஆம் நாள் ஆட்டநேர முடிவின்போது அதன் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை இழந்து 27 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
போட்டியின் மூன்றாம் நாளான இன்று (07) காலை தனது முதல் இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை இளையோர் அணி மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி மேலும் 269 ஓட்டங்களைக் குவித்தது.
மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய தினுர களுபஹன 229 பந்துகளை எதிர்கொண்டு 16 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் ஆட்டம் இழக்காமல் 150 ஓட்டங்களைக் குவித்தார்.
65 ஓட்டங்களைப் பெற்ற மல்ஷ தருபதியுடன் 6ஆவது விக்கெட்டில் 103 ஓட்டங்களைப் பகிர்ந்த களுபஹன, 35 ஓட்டங்களைப் பெற்ற விஹாஸ் தெவ்மிக்கவுடன் மேலும் 114 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
போட்டியின் முதலாம் நாளான செவ்வாய்க்கிழமை (05) முன்வரிசை வீரர்களான புலிந்து பெரேரா (71), அணித் தலைவர் சினேத் ஜயவர்தன (34), ரவிஷான் நெத்சர (31) ஆகியோர் சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தனர்.
மேற்கிந்தியத் தீவுகள் இளையோர் அணி பந்துவீச்சில் தரிக்யூ எட்வேர்ட் 99 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் இசய் தோர்ன் 58 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நேதன் சோலி 100 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.